தடகளப் போட்டிகளில்  பதக்கம் வென்ற  ராணுவ வீரர்களுக்கு குன்னூரில் பாராட்டு

22-ஆவது ஆசிய தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற குன்னூர் எம் ஆர்சி  ராணுவ முகாமைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.  

22-ஆவது ஆசிய தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற குன்னூர் எம் ஆர்சி  ராணுவ முகாமைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.  
 22-ஆவது ஆசிய தடகள போட்டிகள் ஒடிஸா மாநிலம்,  புவனேசுவரத்தில்  அண்மையில் நடைபெற்றன.
இதில்  குன்னூர் எம் ஆர்சி  ராணுவ முகாமில் நாயக்ஸ் சுபேதர்களாக  பணியாற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன்,  கேரள மாநிலம்,  சுல்தான் பச்சேரியைச் சேர்ந்த டி.கோபி ஆகிய 2  ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.  
இதில்  1000,  5000 மீட்டர் தூர  தடகளப் போட்டியில்  லட்சுமணன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
10,000 ஆயிரம் மீட்டர் தடகளப்  போட்டியில் கோபி  இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 போட்டியில் வெற்றிபெற்ற இந்த ராணுவ வீரர்களுக்கு நீலகிரி மாவட்ட ஹாக்கி அமைப்பு,  அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் குன்னூர் லெவல் கிராசிங்கில்  வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து இருவரும்  ஜீப்பில் ஊர்வலமாக மேளதாளம் முழங்க சாமண்ணா பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் எம் ஆர்சி ராணுவ முகாமுக்கு சென்றனர்.
தங்கப் பதக்கம்  வென்ற லட்சுமணன் கூறுகையில்,  "தடகள போட்டியில்  தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இளைஞர்கள்  தடகளப்  போட்டியில் பங்கு பெற வசதியாக நீலகிரி மாவட்டத்தில் சின்தெட்டிக் ஒடுதளம் அமைக்க வேண்டும்' என்றார். இந்நிகழ்ச்சியில் ஹாக்கி நீலகிரிஸ் அமைப்பாளர் அனந்த கிருஷ்ணன்,   குன்னூர் நகர மன்ற முன்னாள் தலைவர் டி.சரவணகுமார்,  தமாகா நகர தலைவர் எஸ்.அனந்தகுமார், திமுக இளைஞரணியைச்  சேர்ந்த ஜாகிர்,  வியாபாரிகள் சங்க  செயலாளர்  ரகீம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து  கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை  முன்னாள் ராணுவ  வீரர் சுரேஷ் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com