உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: தாவரவியல் பூங்காவுக்கு 3 நாள்களில் 25,000 பேர் வருகை

கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் வெயில்  சுட்டெரிப்பதால் மலை மாவட்டமான உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தற்போதே அதிகரித்துள்ளது.

கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் வெயில்  சுட்டெரிப்பதால் மலை மாவட்டமான உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தற்போதே அதிகரித்துள்ளது.

உதகையில் கோடை சீசன் இதுவரையிலும் அதிகாரப் பூர்வமாகத் தொடங்காத நிலையிலும், மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வுகள் முழுமையாக முடிவடையாத நிலையிலும்கூட, சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தற்போதே அதிகரித்து வருகிறது.

உதகையில், குதிரைப் பந்தயம் தொடங்கும் ஏப்ரல் 14-ஆம் தேதியே அதிகாரப்பூர்வமான கோடை சீசன் தொடங்கும் நாளாகக் கருதப்படுகிறது. அதிலிருந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு கோடை சீசன் இருக்கும். நிகழாண்டில் சமவெளிப் பகுதிகளில் தற்போதே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. அதேசமயம், நீலகிரியில் பெரும்பாலான இடங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்துள்ளது. தட்பவெப்ப நிலையும் இதமாக உள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை 4,239 பேர், சனிக்கிழமை 8,906 பேர், ஞாயிற்றுக்கிழமை 11,133 பேர் நுழைவுக் கட்டணம் செலுத்தி வந்ததாக தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் உமாராணி தெரிவித்தார். இவர்களோடு உள்ளூர் மக்களும், முக்கிய விருந்தினர்களுமாக கடந்த 3 நாள்களில் மட்டும் தாவரவியல் பூங்காவுக்கு மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

 உதகை படகு இல்லத்தில், படகு சவாரிக்காகவும், குதிரை சவாரிக்காகவும் கடந்த 3 நாள்களில் சுமார் 18,000 பேர் வந்துள்ளனர். அரசினர் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச் சிகரம், அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

உதகையில் தற்போது பகலில் வெயிலும், பிற்பகலில் மழைத் தூறலும், இரவில் குளிருமாக இதமான சூழல் நிலவுகிறது. எதிர்வரும் நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com