அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் ஸ்ரீராம் நகர் லீஸ் பகுதி மக்கள்

மஞ்சூர் அருகே இத்தலார் ஊராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீராம் நகர் லீஸ் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மஞ்சூர் அருகே இத்தலார் ஊராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீராம் நகர் லீஸ் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
  இத்தலார் ஊராட்சி ஸ்ரீராம் நகர் லீஸ் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள்,  உதகை, குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால்  ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள கன்னேரிமந்தனை கிராமத்து வந்துதான், தனியார் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் மூலமாக பிற பகுதிகளுக்குச் செல்ல முடியும்.
இரவு நேரங்களில், ஸ்ரீராம் நகர் லீஸ் பகுதி மக்கள், ஊருக்குத் திரும்ப வேண்டுமானால் இருட்டில்தான் வர வேண்டியுள்ளது.
 இந்தப் பகுதி பாலகொலா, இத்தலார் ஆகிய ஊராட்சிகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாலகொலா ஊராட்சிக்கு உள்பட்ட எல்லைப் பகுதியில் குடியிருப்புகள் இல்லாததால்  தெருவிளக்குகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் இச்சாலை வழியாக நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருவிளக்கு, நடைபாதை, கழிவுநீர்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை இரவு நேரத்தில் தொட்டில் கட்டித் தூக்கி செல்லும்  அவல நிலை ஏற்பட்டுள்ளது.
 இப்பகுதிக்கு ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் இங்குள்ள தொங்கு பாலத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் அக்கறைக்குச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இந்தப் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்
இக்கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
  இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் கூறியதாவது:
 ஸ்ரீராம் நகர் லீஸ் கிராமத்தில் பல ஆண்டுகளாக தடுப்புச் சுவர், நடைபாதை இல்லாமல் உள்ளது. கழிவுநீர்க் கால்வாய்கள் முறைப்படி ஏற்படுத்தி கொடுக்காததால் இக்கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுத் தொல்லை அதிகரிப்பதுடன், பல்வேறு சரும நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
  இக்கிராமத்தை ஒட்டிய பகுதியில் சில்ஹல்லா நீர்மின் திட்டத்துக்கான  அணை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இக்கிராமத்துக்கு  என தனியாக எந்த விதமான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
இக்கிராமத்துக்கு அரசு அதிகாரிகள் யாரும் நேரில் ஆய்வு செய்யகூட வருவது  கிடையாது. இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com