கீழ்குந்தா பேரூராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட 11.2 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மீட்பு

மஞ்சூர் அருகே கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான குந்தா பாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 11.2 ஏக்கர் தேயிலைத் தோட்டம் வியாழக்கிழமை கையகப்படுத்தப்பட்டது.

மஞ்சூர் அருகே கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான குந்தா பாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 11.2 ஏக்கர் தேயிலைத் தோட்டம் வியாழக்கிழமை கையகப்படுத்தப்பட்டது.
 மஞ்சூர் அருகே கீழ்குந்தா பேரூராட்சிக்கு உள்பட்ட குந்தா பாலம் பகுதியில் 11.2 ஏக்கர் தேயிலைத் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு குந்தகைக்கு விட்டு பேரூராட்சி நிர்வாகம் வருவாய் ஈட்டி வந்தது.
 இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குந்தா பாலம் பகுதியைச் சேர்ந்த சுமார் 25 பேர் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான இந்த நிலத்தை கையகப்படுத்த ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 அதனடிப்படையில், பேரூராட்சிக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தை மீட்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களிடம் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, போலீஸார், வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் கடந்த ஆண்டு நில அளவை மேற்கொண்டனர்.
 அதன்பேரில், கீழ்குந்தா பேரூராட்சிக்குச் சொந்தமான  நிலத்தை தனியார் யாரும் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகக் கூறி சம்பந்தப்பட்ட தேயிலைத் தோட்டப் பகுதியில் தட்டி வைத்துள்ளனர்.
 பின்னர், மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு 3 ஆண்டுக்கு குத்தகைக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் விட்டனர். அப்போது, குத்தகைக்கு எடுத்தவர் தேயிலைத் தோட்டத்தில் இலை பறிக்கச் சென்றபோது ஆக்கிரமிப்பாளர்கள் 25 பேர் ஒன்றிணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 இதனால், குத்தகைதாரர் சம்பந்தப்பட்ட தேயிலைத் தோட்டத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆக்கிரமிப்பாளர்களிடம் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதனால், தேயிலைத் தோட்டத்தில் இலை பறிப்பது தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது.
 இதையடுத்து, குத்தகைதாரரிடம் வாங்கிய தொகை திருப்பி செலுத்தப்பட்டது. தற்போது மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகத்துக்கு சம்பந்தப்பட்ட இடத்தை கையகப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, உதகை கோட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில், குந்தா வட்டாட்சியர் சாந்தினி, பேரூராட்சி உதவி இயக்குநர் ராஜகோபால், கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், வருவாய்த் துறை அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள், உதகை புறநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசுப்பிமணியன் மேற்பார்வையில், 100-க்கு மேற்பட்ட காவல் துறையினர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட இடம் கையகப்படுத்தப்பட்டது.
 இதுகுறித்து, நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கூறுகையில், 25  ஆண்டுகளாக கீழ்குந்தா பேரூராட்சிக்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்தி வந்த விவசாயிகளிடம் இருந்து தேயிலைத் தோட்டத்தை கையகப்படுத்தியது, மனித உரிமை மீறல் செயல். இப்பிரச்னை தொடர்பாக மனித உரிமைக் கழகத்தில்
முறையிடப்படும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக நீலகிரி மாவட்ட விவசாய சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com