ஓவேலியில் பழங்குடியினருக்கான கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணி தொடக்கம்

கூடலூர் அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியிலுள்ள பழங்குடி கிராமங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கூடலூர் அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியிலுள்ள பழங்குடி கிராமங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
     அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி  வளாகத்தில் நடைபெற்ற  விழாவில் ஆட்சியர்  இன்னசென்ட் திவ்யா பேசியது:
 கூடலூர் கோட்டம் 1969 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜமீன், மைசூர் ராஜாவுக்குச் சொந்தமாக இருந்தது. 1974 ஆம் ஆண்டு ஜென்மம் ஒழிப்புக்குப் பிறகு அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
      ஜென்மம் ஒழிப்புக்குப் பிறகு, நிலம்பூர் கோவிலகம் ஜென்மி கோதவர்மன் திருமல்பாடு உச்ச நீதிமன்றத்தில்  முறையிட்டார். அதன்படி மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டு, கடந்த 2004ஆம் ஆண்டு கூடலூர் ஜென்மம் நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  அந்த குழுவின் பரிந்துரையின்படி, தீர்வு செய்யப்படாத நிலுவையிலுள்ள பிரிவு-17 நிலங்களில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. எனினும், பழங்குடி மக்கள் வாழும் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்ய உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரலாம் என பரிந்துரைக்கப்பட்டது. இதனடிப்படையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
     தொடர் நடவடிக்கை மேற்கொண்டதால் ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட காமராஜ் நகர், பாலவாடி, குறிஞ்சி நகர், பசுமை நகர், பாரதி நகர் உள்ளிட்ட 11 பழங்குடியின குக்கிராமங்களுக்கு ரூ.321.10 லட்சம் மதிப்பீட்டிலும், தேவர்சோலை பேரூராட்சியில் ஆலவயல், மூலதைமட்டம், கரக்கப்பள்ளி உள்ளிட்ட 28 கிராமங்களுக்கு ரூ.174.34 லட்சம் மதிப்பீட்டிலும், நெல்லியாளம் நகராட்சியிலுள்ள 21 பழங்குடி குக் கிராமங்களுக்கு  ரூ. 288.35 லட்சம் மதிப்பீட்டிலும் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள சேரங்கோடு, நெலாக்கோட்டை ஊராட்சிகளிலுள்ள 9  பழங்குடி கிராமங்களுக்கு ரூ.160.04 லட்சம் மதிப்பீட்டிலும், மொத்தம் 67 பழங்குடி  கிராமங்களில் வசிக்கும் 8000 பழங்குடி மக்களுக்கு  சாலை, நடைபாதை மேம்படுத்துதல், தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் பழங்குடியின வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், வீடுகள் பழுது பார்த்தல் குடிநீர் மற்றும் கழிவறைகள் கட்டித் தர ரூ.943.83 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடைமுறைப்படுத்த உத்தரவு வழங்கப் படுகிறது என்றார் ஆட்சியர்.  
    விழாவில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் திலீப், குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி,  அர்ஜூனன் எம்.பி., ஆவின் தலைவர் மில்லர், மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன், கூடலூர் வட்டாட்சியர் சிவக்குமார், பந்தலூர் வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரம், ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலர் எம்.என்.வேணுகோபால் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பழங்குடி மக்கள் கலந்துகொண்டனர். கூடலூர் கோட்டாட்சியர் முருகையன் வரவேற்றார். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பி.ராஜகோபால் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com