ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க் கட்சித்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு  மு.க .ஸ்டாலின் வந்துள்ளார். உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்  கூட்டத்தில்  கலந்து  கொண்ட  அவர், குன்னூர் டைகர் ஹில் பகுதியிலுள்ள அரசு தேயிலைத் தோட்டத்தை திங்கள்கிழமை பார்வையிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின்  நலனுக்காக திமுக ஆட்சிக் காலத்தில்  நீலகிரி,  வால்பாறையில் அரசு தேயிலைத்  தோட்டக் கழகம் (டான் டீ ) தொடங்கப்பட்டது.  அதிமுக  ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்டக் கழகத்தில்  எந்தத் திட்டங்களும் மேற்கொள்ளாததால் தற்போது அந்நிறுவனம்  நலிவடைந்துள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சில்வர் ஓக் மரங்களை ஆளுங்கட்சியினரும்,  அதிகாரிகளும்  இணைந்து வெட்டி  விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்வதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து சட்டப் பேரவையில் திமுக கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அது தடுத்து நிறுத்தப்பட்டது.
அதிமுக அரசு மக்கள் பிரச்னையில் ஆர்வம் காட்டுவதில்லை.  முன்னாள்  முதல்வர் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஜெயலலிதாவைத் தொடர்ந்து,  பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால்,  இன்று வரை அதில் பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
 தமிழகத்தில்  கடன் பிடியில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். ஆனால்,  மத்திய,  மாநில அரசுகள்  இதைக் கண்டுகொள்வதே இல்லை.
திமுக சார்பில்   நீதிமன்றத்தில் தொடரப்பட்ட  வழக்கின் முடிவைப் பொருத்து புதிய ஆளுநரைச் சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து,  குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்குச்  சென்ற ஸ்டாலின்  அங்குள்ள பழமை வாய்ந்த மரங்களைப் பார்வையிட்டதுடன்,  படகு சவாரியும் செய்தார்.
 மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா,   முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,   மாவட்டச் செயலாளர் பா.மு. முபாரக்,  திமுக தேர்தல் பணிக் குழுச் செயலாளர் க.ராமச்சந்திரன்,  நகரச் செயலாளர்  ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com