பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விழிப்புணர்வு

கோத்தகிரி வனச்சரகம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இயற்கை விழிப்புணர்வு களப் பயணம் முள்ளி, பரளிக்காடு வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

கோத்தகிரி வனச்சரகம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இயற்கை விழிப்புணர்வு களப் பயணம் முள்ளி, பரளிக்காடு வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டல பாதுகாப்புத் திட்டத்தின்கீழ்  நடைபெற்ற இந்த களப் பயணத்துக்கு, கோத்தகிரி வனச் சரகர் சீனிவாசன் தலைமை வகித்தார். கோத்தகிரி வனச் சரகத்துக்கு உள்பட்ட 10 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், லாங்க்வுட் சோலை பாதுகாப்பு குழுச் செயலாளர், ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியதாவது:
பயோடைவர்சிடி எனப்படும் உயிர் பண்மம் மிகுந்த 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சிறிய நிலப்பரப்பில் அதிக வகையான உயிர்கள் வாழும் பகுதியை உயிர்ச்சூழல் மண்டலம் என ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. உலக முழுவதும் 85 நாடுகளில் 375 உயிர் மண்டல காப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் முதல் உயிர்ச்சூழல் மண்டலமாக நீலகிரி அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
நீலகிரி உயிர்க் காப்பு மண்டலத்தில் இம்மாவட்டத்துடன், கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திபூர், கேரளத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு, கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டி ஆகிய பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நம் நாட்டில் தற்போது 75 தேசிய பூங்காக்களும், 421 சரணாலயங்களும் உள்ளன. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்துக்கு உள்பட்ட முதுமலை தேசிய பூங்காவில் 34 புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
புலி பல்லுயிரி சூழல் விலங்கு. ஒரு புலி வாழ்ந்தால் 50 சதுர கி.மீ. பரப்புள்ள காடும், அதில் உள்ள உயிரினங்களும் நன்றாக வாழும். முக்கியமாக, இப்பரப்பளவு நிலப் பகுதியில் ஆறு, நதிகள் உற்பத்தியாகும். மசினகுடி முதல் மாயாறு வரை ஆண்டுக்கு 1,700 யானைகள் வந்து செல்கின்றன.   ஒரு யானை வாழ்ந்தால் 16 வகையான தாவர இனங்கள் வாழும். யானைகள் ஆண்டுக்கு 300 கி.மீ. வரை வந்து செல்லும். ஒரு நாளுக்கு 40 கி.மீ. தூரம் வரை நடக்கும்.
முள்ளி வனப் பகுதி பல கானுயிர்களின் வாழிடமாக இருந்து வருவதுடன், கோவை மாவட்டத்தில் உள்ள முள்ளி அணை, பெரும்பாலான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. எனவே, உயிர்ச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும் என்றார்.
ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரம் கானுயிர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த இயற்கை விழிப்புணர்வு களப் பயணம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com