பி.எஃப் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் கூடுதலாக 6 லட்சம் பேர் பயன்: மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தகவல்

வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் கூடுதலாக 6 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய தொழிலாளர்

வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் கூடுதலாக 6 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர்  சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்தார். உதகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
அஸ்ஸாம்,  தமிழகம் உள்ளிட்ட  நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  உள்ள தேயிலைத் தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பயன்கள் கிடைக்கும் வகையில் 1951-ஆம் ஆண்டின் தோட்டத் தொழிலாளர் சட்டத்தில்  உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இதுதொடர்பாக தோட்ட  அதிபர்கள்,  தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் மற்றும்  தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய முதலாவது முத்தரப்புக் கூட்டம் குவாஹாட்டியில் நடத்தப்பட்டதையடுத்து தற்போது  உதகையில் நடத்தப்பட்டுள்ளது.  இக்கூட்டம் இணக்கமாகவும்,  சுமுகமாகவும் நடத்தப்பட்டுள்ளதால்  இதன் உத்தேசத் திருத்தங்கள் மக்களவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.
மேலும், தொழில் நிறுவனங்களில் புதிதாக சேரும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்காக செலுத்த அரசின் பங்காக வழங்கும் திட்டத்தின்கீழ் இலக்கை விஞ்சி 6 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக  மத்திய அரசு 1,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறைச் செயலர் சத்யவதியுடன் தமிழகம், கேரளம் மற்றும்  கர்நாடக  மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள்,  தென்னிந்திய தோட்ட  அதிபர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட  தொழிற்சங்கப்  பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com