தீபாவளி பண்டிகை: வனத்தையொட்டிய பகுதிகளில் 3 நாள்கள் பட்டாசு வெடிக்கத் தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி உள்ள வனப் பகுதிகளில் 3 நாள்களுக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி உள்ள வனப் பகுதிகளில் 3 நாள்களுக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி உதகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி உள்ள சுற்றுப் பகுதிகளில் அக்டோபர் 17 முதல் 19-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு எத்தகைய வகையிலுமான  பட்டாசுகளையும் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையிலும், அவற்றின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் வகையிலும் எந்தவித நடவடிக்கைககளிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 அதேபோல, மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் காட்டேஜ்கள், ரிசார்ட்டுகளில் தீபாவளி பண்டிகை தினத்தன்று மட்டும் அதிக ஒலியெழுப்பக் கூடிய, அனைத்து வகைகளிலான  பட்டாசுகளையும் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத் துறையினரின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி  இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் முழு  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  விதிகளை  மீறி செயல்படுவோர் மீது வனப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
 மேலும், உதகை சுற்றுப் பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் பட்டாசுகளால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 உதகையில் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள புனித திரேசன்னை உயர்நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளர் அமல்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச் சூழலை பாதுகாப்போம், பட்டாசு  வெடிப்பதைத் தவிர்ப்போம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.  பட்டாசுக்காக செலவிடும் தொகையை புத்தகங்களாக வாங்கிச் செலவழிப்போம் என்ற  உறுதிமொழியும்  எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com