உதகையில் மலை ரயில் தினம் கொண்டாட்டம்

உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்ட  தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்ட  தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு மட்டும் முதன் முதலில் மலை ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதன்பின்னரே குன்னூரிலிருந்து உதகைக்கு மலை ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கியது.  உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்ட தினமே மலை ரயில் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,  109-ஆவது ஆண்டு மலை ரயில் தின நிகழ்ச்சிகள் உதகை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மலை ரயில் பாரம்பரிய நீராவி  ரத அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதகை ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்காக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு,  பிரமாண்ட  கேக்கும் வெட்டப்பட்டது.  
அதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு நீலகிரி மலை ரயில் தொடர்பான விளக்க கையேடு பிரதிகள் பரிசாக வழங்கப்பட்டன.  பின்னர் உதகை ரயில் நிலையம் தூய்மையான ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுத் தெரிவித்தும்,  அதற்கான முயற்சிகளை எடுத்ததற்கும் உதகை ரயில் நிலைய அலுவலர் பிரமோத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.  அதேபோல,  ரயில்வே பாதுகாப்பு படை மற்றும்  ரயில்வே காவல் துறையினருக்கும்,   உதகை மலை ரயில் பாதையில் சிறப்பாக  செயல்பட்டுவரும் கேங் மேன் ஜெயராஜ், முருகன் ஆகியோருக்கும்  சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் இயற்கை பாதுகாப்பு அமைப்புகளின் சார்பில் நீலகிரி அன்றும்-இன்றும் என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,  இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன்,  இண்டாக் அமைப்பின் தலைவர் கீதா சீனிவாசன்,  மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன்,   நீலகிரி பாரம்பரிய நீராவி ரத அறக்கட்டளையின் தலைவர் நடராஜ்,  மாவட்ட  சுற்றுலா அலுவலர் ராஜன், வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com