இல்லாதவர்களுக்கு இருப்பதைக் கொடுப்போம்! 'அன்புச் சுவர்' திட்டம் உதகையில் தொடக்கம்

உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு உதவிடும் வகையிலான 'அன்புச் சுவர் திட்டம்' உதகையில் தொடங்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு உதவிடும் வகையிலான 'அன்புச் சுவர் திட்டம்' உதகையில் தொடங்கப்பட்டுள்ளது.
உதகையில் மத்திய பேருந்து நிலையம் அருகே நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் இப் புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
நம்மிடம் கூடுதலாக உள்ள பொருள்களையும், பயன்படுத்தாத பொருள்களையும் தேவைப்படுவோருக்கு வழங்கும் திட்டமான அன்புச்சுவர் திட்டம் தமிழகத்தில் திருநெல்வேலியில் தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து, தற்போது நீலகிரி மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, பொதுமக்களும் வசதி படைத்தோரும், தங்களிடமுள்ள பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள ஆடைகள், பொருள்கள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்டவற்றை தேவையானவர்கள் எடுத்துச் செல்லும் வகையில் ஒரே இடத்தில் வைக்கும் வகையில், உதகை மத்திய பேருந்து நிலையம் 'அன்புச்சுவர்' என்ற இடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கான கட்டடத்தை உதகை நகராட்சி நிர்வாகம் கட்டித் தந்துள்ளது. இதைப் பராமரிப்பதற்கு தனியார் முன்வந்துள்ளனர். அவர்களிடம் நமக்குத் தேவையில்லாத பொருள்களை அளித்தால் அவர்கள் அவற்றை தேவையானவர்களுக்கு தருவர். இத்திட்டம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, நம்மிடமுள்ள கூடுதலான உணவையும் இவர்களுக்கு அனுப்பி வைத்தால், அந்த உணவை தேவைப்படுவோருக்கு அனுப்பி வைப்பர். இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நெல்லையைத் தொடர்ந்து உதகையிலும் அன்புச்சுவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏழைகள், தேவையான பொருள்களை வாங்க இயலாதவர்களுக்கு, வசதியுள்ளவர்கள் உதவும் வகையிலான இத்திட்டத்தின்கீழ் நல்ல நிலையிலுள்ள பொருள்கள் மட்டுமின்றி உணவு வகைகளையும் வழங்கலாம். உதகையைத் தொடர்ந்து விரைவில் இத்திட்டம் குன்னூர் நகராட்சியிலும் தொடங்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பொக்லைன் இயந்திரங்களை இயக்கவும், ஆழ்துளைக் கிணறு அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இயக்கியதால், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உதகை அரசினர் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. அதைப் போலவே டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மெழுகு பூசப்பட்ட காகித டம்ளர்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக கண்ணாடி, எவர்சில்வர், மண் குடுவைகளை மட்டும் பயன்படுத்தலாம். அவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க 16 சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று சோதனை செய்ய 64 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள 21 தனியார் விடுதிகளுக்கு எச்சரிக்கை முன்னறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றில் 9 விடுதிகள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளன. பிற விடுதிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
உதகை நகரில் பழுதடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், கோட்டாட்சியர் சிவகாமி, நகர்மன்ற ஆணையர் (பொறுப்பு) ரவி, உதகை வட்டாட்சியர் மகேந்திரன், அன்புச்சுவர் பொறுப்பாளர்கள் இம்தியாஸ், தம்பி இஸ்மாயில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அன்புச்சுவர் திட்டத்துக்கு உதவ நினைப்போர் 98435 13484, 96557 56675, 97514 28998 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com