கடும் மேகமூட்டத்தால் பாதிப்பு: தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்

கடும் மேகமூட்டம் காரணமாக தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது

கடும் மேகமூட்டம் காரணமாக தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.
மஞ்சூர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பசுந்தேயிலை செடிகளில் மகசூல் அதிகரித்துள்ளது. எனினும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. பசுந்தேயிலை கிலோ ரூ. 10 முதல் ரூ. 11 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் தேயிலை மகசூல் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக மஞ்சூர், உதகை, கோத்தகிரி, குன்னூர் போன்ற இடங்களில் கொப்புள நோய் தாக்குதல் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேயிலை விவசாயி சசிகுமார் கூறியதாவது:
தேயிலைச் செடிகளுக்கு வெயிலும், மழையும் மாறிமாறிக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் மகசூல் அதிகரிக்கும். தொடர்ந்து வெயில் அடித்தால் தேயிலைச் செடிகள் கருகிவிடும். தொடர் மழை பெய்தாலோ, மேகமூட்டம் காணப்பட்டாலோ கொப்புள நோய் தாக்குதல் அதிகரிக்கும்.
தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தின் சில இடங்களில் வானம் எப்போதும் கடும் மேகமூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் பசுந்தேயிலையை கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் பனிப் பொழிவு இருக்கும். அப்போது பசுந்தேயிலையில் கொழுந்து இலைகள் கருக ஆரம்பித்து விடும். இதனால் தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
கவாத்து செய்ய அதிகாரிகள் வலியுறுத்தல் மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது நிலவும் கால நிலையில், பசுந்தேயிலைச் செடிகளை விவசாயிகள் கவாத்து செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து குந்தா தேயிலை வாரிய இணை இயக்குநர் ரமேஷ் கூறியதாவது:
மாவட்டத்தில் பருவமழை பெய்யும் சமயங்களில் தேயிலைத் தோட்டங்களில் உள்ள மண்ணில் ஈரப்பதம் இருக்கும். அப்போது தேயிலைச் செடிகளை கவாத்து செய்யலாம். ஆனால் தற்போது நிலையான சீதோஷ்ண நிலை நிலவாததால், விவசாயிகள் தங்களது தேயிலைத் தோட்டங்களில் கவாத்து செய்ய குறிப்பிட்ட மாதத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்û.
மழை பெய்யும் காலங்களில் தேயிலைத் தோட்டங்களிலுள்ள மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போதே தேயிலைச் செடிகளை கவாத்து செய்வது நல்லது. தற்போது கவாத்து செய்வதால் 45 தினங்களுக்குள் தேயிலைச் செடிகள் துளிர் விட்டுவிடும். அதன்மூலமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியால் பாதிப்பு ஏற்படமல் தேயிலைச் செடிகள் பாதுகாக்கப்படும். அதனால், மார்ச், ஏப்ரல் மாதங்களில் நல்ல தரமான பசுந்தேயிலையை அறுவடை செய்ய முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com