நவீன நீலகிரி உருவாகி 200 ஆண்டுகள்: ஆகஸ்ட் 18 முதல் ஓராண்டுக்கு கொண்டாட்டம்: ஆட்சியர்

நவீன நீலகிரி உருவாகி 200ஆவது ஆண்டு மற்றும் கோவை மாவட்டத்தில் இருந்து பிரிந்து நீலகிரி தனி மாவட்டமாக உருவான 150ஆவது

நவீன நீலகிரி உருவாகி 200ஆவது ஆண்டு மற்றும் கோவை மாவட்டத்தில் இருந்து பிரிந்து நீலகிரி தனி மாவட்டமாக உருவான 150ஆவது ஆண்டையொட்டி ஓராண்டு கொண்டாட்டங்கள் இம்மாதம் 18ஆம் தேதி முதல் தொடங்குகின்றன என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
கோவை மாவட்டத்துடன் நீலகிரி இணைந்து ஒரே மாவட்டமாக இருந்த காலகட்டத்தில் 1818 ஆம் ஆண்டில் அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சலீவன் கோவையில் இருந்து சிறுமுகை வழியாக கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியைச் சென்றடைந்தார். அங்கு அவர் தங்குவதற்காக ஒரு கான்கிரீட் கட்டடமும் கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்தே அவர் உதகையைச் சென்றடைந்து நவீன நீலகிரியையும் உருவாக்கினார். நீலகிரிக்கு ஜான் சலீவன் வந்து 200 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல் கோவை மாவட்டத்துடன் இணைந்திருந்த நீலகிரி பகுதிகள் ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு, நீலகிரி தனி மாவட்டமாக உருவாகி 150 ஆண்டுகளாகின்றன.
நீலகிரியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் கொண்டாடும் வகையில் இம்மாதம் 18ஆம் தேதி உதகையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:
நீலகிரி தனி மாவட்டமாக உருவான 150ஆவது ஆண்டு நிகழ்ச்சியையும், ஜான் சலீவனால் நவீன நீலகிரி உருவாக்கப்பட்ட 200ஆவது ஆண்டையும் சிறப்பாக ஓராண்டுக்கு கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பெருமையை பறை சாற்றும் வகையில் ஓராண்டுக்கு நடத்தப்படும் இந்நிகழ்ச்சியின் தொடக்க நாளில் நீலகிரியின் பண்டைய பழங்குடிகளான தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பணியர் மற்றும் காட்டுநாயக்கர் இன மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அத்துடன் அவர்களது கலாசாரத்தை வெளிக்காட்டும் நிகழ்ச்சிகளும், அதுதொடர்பான சிறப்பு புகைப்படக் கண்காட்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றுடன் நீலகிரி மாவட்டத்துக்கு என தனி அடையாளச் சின்னம் (லோகோ) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அடையாளச் சின்னத்தை வெளிக்காட்டும் வகையில் தபால் துறையின் சார்பில் சிறப்பு அஞ்சல் உறை (போஸ்டல் கவர்) வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மக்ககளவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், சட்டப் பேரவை உறுப்பினர் ராமு ஆகியோருடன் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்களும், பழங்குடியின மக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் சிறப்பையொட்டி நடத்தப்படும் இந்த ஓராண்டு கொண்டாட்டங்களின்போது நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழில்களான தேயிலை மற்றும் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com