நீலகிரி மாவட்டத்துக்கு 4 நாள் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் தகவல்

நீலகிரி மாவட்டத்துக்கு அடுத்த 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா


நீலகிரி மாவட்டத்துக்கு அடுத்த 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் மலப்புரம், வயநாடு, கள்ளிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், இப்பகுதிகளை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்துக்கும் அடுத்த 4 நாள்களுக்கு கன மழை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல் மாவட்டத்தில் கடும் மேக மூட்டமும், கடும் குளிரும் நிலவிவருகிறது.
பகல் நேரமே இரவைப்போல இருண்டு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பலத்த காற்றும் வீசுகிறது. ஒரு சில இடங்களில் தூறல் மழையும் பெய்து வருகிறது.
மாவட்டத்துக்கு கனமழை குறித்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறித்து ஆட்சியரிடம் கேட்டதற்கு, மழையை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையிலி இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே உதகையில் சனிக்கிழமை காலையில் வீசிய பலத்த காற்றின் காரணமாக உதகை - மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் சாலையின் குறுக்கே பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது அச்சாலையில் வாகனங்கள் ஏதும் செல்லாததோடு, நடந்து செல்லும் பொதுமக்களும் இல்லாததால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்த தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக அம்மரத்தை வெட்டி அகற்றினர். இச்சம்பவத்தால் இச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் வருமாறு (அளவு மி.மீட்டரில்): தேவாலா-18, அவலாஞ்சி-13, கிளன்மார்கன்-12, மேல்பவானி-7, நடுவட்டம் மற்றும் குந்தா தலா-6, கூடலூர் மற்றும் கெத்தை தலா 5, எமரால்டு-4, உதகை-1.1, கேத்தி-1 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com