சேரம்பாடியில் மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாம்:  ரூ.40 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூடலூர் அருகேயுள்ள சேரம்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி மக்கள் தொடர்பு முகாமில் 107 பயனாளிகளுக்கு ரூ.40.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூடலூர் அருகேயுள்ள சேரம்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி மக்கள் தொடர்பு முகாமில் 107 பயனாளிகளுக்கு ரூ.40.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:
மக்களைத் தேடி அரசு என்பதுதான் மனுநீதி நாள் முகாமின் நோக்கமாகும்.  அதைப்போலவே அனைத்துத் துறை அலுவலர்களும் இம்முகாமில் பங்கேற்றுள்ளனர். அதனால் இத்தகைய முகாம்களை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  
பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இம் முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
சேரம்பாடி ஊராட்சியில் 2016-17-ஆம் ஆண்டில் ரூ.7.8 கோடி மதிப்பீட்டில் 422 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதைப்போலவே 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.7.59 கோடி மதிப்பீட்டில்  636 வளர்ச்சிப் பணிகள் எடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்றார்.
இம் முகாமில் முதியோர், முதிர்கன்னி, விதவை மற்றும் ஊனமுற்றோர் உதவித் தொகையாக 62 பயனாளிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.62,000,  25 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள்,  மாவட்ட  முன்னோடி வங்கியின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.39.7 லட்சம் கடன் உதவி,  பட்டா மாறுதல் உத்தரவு, சாதிச் சான்றிதழ் என  107 பயனாளிகளுக்கு  ரூ.40.32  லட்சம் மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளை ஆட்சியர் வழங்கினார். அத்துடன்  முகாமுக்கு வந்திருந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 136 மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.
இந் நிகழ்ச்சியில் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் திராவிடமணி,  கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முருகையன், பந்தலூர் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com