முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வர் பங்கேற்கிறார்

குன்னூரில் புதிதாக புனரமைக்கப்பட்ட முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குன்னூரில் புதிதாக புனரமைக்கப்பட்ட முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், முதல்வர் எடப்பாடி  கே.பழனிசாமி பங்கேற்கவுள்ளதாக கோயில் நிர்வாகியும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான சி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள ஓட்டுப்பட்டறை, முத்தாலம்மன் கோயில் 300 ஆண்டுகள்   பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
நீலகிரி மாவட்ட மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து கட்டிய இந்தக் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.  
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் வியாழக்கிழமை அம்மனுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்த 140 பக்தர்கள் அபிஷேகக் குடங்களுடன் மௌண்ட்பிளசண்ட் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு எம்.பி.கோபாலகிருஷ்ணன் தலைமையில்  ஊர்வலமாகச் சென்றனர். 
கும்பாபிஷேகத்தன்று மௌண்ட்பிளசண்ட் பகுதியில் உள்ள சகாய மாதா மண்டபத்தில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானமும், வாணவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. 
முதல்வர் வருகையையொட்டி,  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக   நடைபெற்று வருகின்றன என மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com