விளைநிலங்கள் விலை போவதைத் தடுக்கவேண்டும்: விவசாய சங்கம் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில், விளை நிலங்கள் விலை போவதைத் தடுக்க, விவசாயத் தொழிலில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க

நீலகிரி மாவட்டத்தில், விளை நிலங்கள் விலை போவதைத் தடுக்க, விவசாயத் தொழிலில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சிறு விவசாயிகள் விவசாய சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சங்கத் தலைவர் விஸ்வநாதன் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 
நீலகிரியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடியும், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முள்ளங்கி உள்பட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
விவசாயப் பயிர்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காமை, சந்தை வசதியின்மை, தொழிலாளர் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை, பருவமழை தவறுவது என  பல காரணங்களால், விவசாயத் தொழிலில் பல நெருக்கடிகளை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.
ஒருசில பெரிய விவசாயிகள் தவிர சிறு, குறு விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில்தான் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான விவசாயிகள், விவசாயத் தொழிலைக் கைவிட்டு, தங்களின் விளை நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
பெரிய தேயிலை தோட்ட நிறுவனங்களைப் பொறுத்தவரை, தோட்டத் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க வட மாநில தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றன. அவர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளையும், தோட்ட நிர்வாகங்களே செய்து கொடுப்பதால், விவசாயத் தொழிலாளர் பிரச்னை சமாளிக்கப்படுகிறது. ஆனால், சிறு, குறு விவசாயிகளுக்கு இத்தகைய வாய்ப்பு இல்லை.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இளம் வயது தொடங்கி, வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பலர் இதில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, தினமும்  ரூ. 203 சம்பளம் வழங்கப்படுகிறது.
ஊராட்சிப் பகுதிகளில், சாலையோரங்களில் உள்ள செடி, கொடிகளை வெட்டி அகற்றுவது, மண் சாலை அமைப்பது, கால்வாய் சுத்தம் செய்வது, மரக்கன்று நடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல ஊராட்சிகளில், நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் முழுப் பயன்கள் தொழிலாளர்களை வந்தடைவதில்லை.  சாலையோரம் உள்ள முள்புதர், செடி, கொடிகளை வெட்டுவது, மண் வேலைகள் செய்வது என, மிக எளிதான பணிகளே வழங்கப்படுகின்றன. கடினமில்லா பணியில், ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணிச்சுமை என்பது, அவர்களுக்கு மிகக் குறைவு. இத்திட்டத்தின் கீழ், அதிக அளவு பணியாளர்களை கணக்கு காண்பிக்க வேண்டும் என்ற நெருக்கடியில், ஊராட்சி நிர்வாகங்களும் அதிக அளவு பணியாளர்களைச் சேர்த்து கணக்கு காண்பித்துக் கொள்கின்றனர். இதுவும், விவசாய தொழிலாளர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
எனவே, ஊரக  வேலைவாய்ப்புத்  திட்டத்தை முழுமைப்படுத்துவதுடன் விளைநிலங்கள் விற்கப்படுவதில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், கேரளத்தில் இருப்பது போல  நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் களையெடுப்பது, கால்வாய் வெட்டுவது உள்பட விவசாயம் சார்ந்த பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, நீலகிரி உள்பட தமிழகத்திலும், விவசாயத் தொழிலில், நூறு நாள் வேலை உறுதி திட்டத் தொழிலாளர்களை ஈடுபடுத்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நூறு நாள் திட்டத்தை, விவசாயத் தொழிலோடு இணைத்தால், விவசாய தொழிலாளர் பற்றாக்குறையைத் தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com