உதகை பேருந்து விபத்தில் காயமடைந்த 9 பேருக்கு ரூ.15.75 லட்சம் நிவாரணம்

உதகை-குன்னூர் சாலையில் உள்ள பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 9 பேருக்கு மொத்

உதகை-குன்னூர் சாலையில் உள்ள பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 9 பேருக்கு மொத்தம் ரூ.15.70 லட்சம் நிவாரண உதவித் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே மந்தாடா பகுதியில் 250 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கடந்த வியாழக்கிழமை கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 9 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறைஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது, தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சாந்தி என்பவருக்கு ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்த நமச்சியவாயம், கணேசன், ராணி, நடராஜ், ஆனந்தன் ஆகிய 5 பேருக்கு தலா ரூ.2 லட்சமும், மிதமான காயமடைந்த பாலசந்தர், மாரிமுத்து, சுகன்யா ஆகிய மூன்று பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் 9 பேருக்கு ரூ.15.75 லட்ம் நிவாரண உதவித் தொகை
வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துத் துறை காப்பீட்டு திட்டத்தில் இரு நபர்களுக்கு ரூ.2.50 லட்சமும், 7 பேருக்கு ரூ.5 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உதகை வழித் தடத்தில் தரமான பேருந்துகள்தான்
இயக்கப்பட்டு வருகின்றன.
விபத்து இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில் சாலை மேம்பாட்டுக்காக ரூ.65 கோடி நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திங்கள்கிழமை உதகையில் ரூ.40 லட்சம் நிதி வழங்கப்படும் என்றார்.
இந்த சந்திப்பின்போது மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநிலங்களவை உறுப்பினர் அர்ச்சுணன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சாந்தி ராமு, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் முத்துக்கிருஷ்ணன், இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தரவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com