சிறுத்தை தாக்கி பெண் பலியான சம்பவம்: 7 இடங்களில் தொழிலாளர்கள் மறியல்

சிறுத்தை தாக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து எஸ்டேட் தொழிலாளர்கள் வால்பாறை நகர் உள்ளிட்ட 7 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுத்தை தாக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து எஸ்டேட் தொழிலாளர்கள் வால்பாறை நகர் உள்ளிட்ட 7 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வால்பாறை நகர் பகுதி போக்குவரத்து இன்றி முடங்கியது.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த காஞ்சமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனைச் சேர்ந்தவர் மதி. இவரது மனைவி கைலாசதேவி (48). எஸ்டேட் தொழிலாளியான இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு குடியிருப்புக்கு வெளியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது தேயிலைச் செடிகளுக்கிடையே பதுங்கியிருந்த சிறுத்தை கைலாசதேவியின் கழுத்துப் பகுதியில் கடித்து இழுத்துச் சென்றது. சப்தம் கேட்டு, அருகில் வசிப்பவர்கள் கைலாசதேவியை இருட்டில் தேடிச் சென்றுள்ளனர். சுமார் 1 மணி நேரத் தேடுதலுக்குப் பின் அருகில் உள்ள ஒரு புதரில் கைலாசதேவி இறந்து கிடப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
தகவல் அறிந்த காவல் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகள் சடலத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், எஸ்டேட் தொழிலாளர்கள் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியறுத்தியுள்ளனர். இதனால் நள்ளிரவு 1 மணிக்கு உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுத்தை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து சனிக்கிழமை காலை 10 மணிக்கு காஞ்சமலை எஸ்டேட் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் செல்லாமல் வால்பாறை தபால் நிலையம், அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, ஸ்டேன்மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், ரொட்டிக்கடை எஸ்டேட் என மொத்தம் 7 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, டி.எஸ்.பி. சுப்பிரமணியம், அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வி.அமீது, அதிமுக நகரச் செயலாளர் மயில்கணேசன், திமுக நகரப் பொறுப்பாளர் பால்பாண்டி மற்றும் வனத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறந்த கைலாசதேவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும். கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்புகளைச் சுற்றியுள்ள புதர்களை வெட்டி உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் சாலை மறியலைத் தொழிலாளர்கள் கைவிட்டனர். அரசின் இழப்பீட்டுத் தொகையில் இருந்து முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்தை கைலாசதேவியின் குடும்பத்தாரிடம் அதிகாரிகள் வழங்கினர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து இன்றி வால்பாறை நகர் பகுதி முற்றிலும்
முடங்கியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com