நீலகிரி மாவட்டத்தில்  4 மாதங்களாக ஊதியம் இன்றித் தவிக்கும் கிராமச் செவிலியர் உதவியாளர்கள்

நீலகிரி மாவட்டத்தில் 4 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் கிராமச் செவிலியர் உதவியாளர்கள் தவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் 4 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் கிராமச் செவிலியர் உதவியாளர்கள் தவிக்கின்றனர்.
தமிழகம் ழுழுவதும் கிராமப்புறப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே செவிலியர்களுக்கு உதவியாக மத்திய குடும்பநலத் துறை சார்பில் ஆஷா ஓர்க்கர்ஸ் என்ற பெயரில் பெண்களை பணி அமர்த்தி உள்ளனர். 
இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அந்தந்த ஆரம்ப சுகாதார எல்லைக்கு உள்பட்ட செவிலியர்களின் கண்காணிப்பில் உள்ள கிராமங்களுக்குச் சென்று கர்ப்பிணிப் பெண்களை பரிசோதனை செய்வர். கர்ப்பக் காலம் மட்டுமல்லாமல் பிரசவக் காலத்தில் குழந்தைகள் வளர்ப்பு குறித்தும் கண்காணித்துத் தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குவர். பின்னர், அதன் விவரங்களை செவிலியர்கள் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் எதுவும் கிடையாது. மாதம் ஓரு முறை பிரசவம் பார்த்தால் மட்டுமே ரூ.1000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். மற்ற நேரங்களில் பரிசோதனை செய்வதற்காக 
மாதம் ஒன்றுக்கு ரூ.500 வரை வழங்கப்படும். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஷா ஓர்க்கர்ஸ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இது குறித்து கிராமச் செவிலியர்கள் கூறியதாவது: ஓவ்வோர் கிராமச் செவிலியரின் கட்டுப்பாட்டிலும் செயல்படும் எங்களைப் போன்ற உதவியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்கவில்லை. பிரசவம் பார்த்தால் மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதுவும் டிசம்பர்முதல் இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், வீடுவீடாகச் சென்று குடும்ப விவரம், புதிதாக வந்திருப்பவர்களின் விவரம் என பல்வேறு கணக்குகளை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு எந்த விதமான ஊக்கத் தொகையும் வழங்குவது இல்லை. நாள்தோறும் பல கி.மீ.தொலைவு நடைபயணம் மேற்கொண்டு இதுபோன்ற பணிகளைச் செய்து வந்தாலும் எங்களுக்கு எந்தவித பயனும் இல்லை. மத்திய அரசு இதற்காக நிதி ஓதுக்காததால் கடந்த 4 மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறோம். இதேநிலை நீலகிரி மட்டும் அல்லாமல் நாடு ழுழுவதும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய,மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லை. எனவே, மனஉளைச்சல் ஏற்பட்டு பெரும்பாலான ஊழியர்கள் இந்த பணியை மேற்கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com