நீலகிரியில் பரவலாக மழை: வனத் தீ குறைய வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பெய்துவரும் தூறல் மழையால் வனத் தீ வெகுவாகக் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பெய்துவரும் தூறல் மழையால் வனத் தீ வெகுவாகக் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.  இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.பிற்பகலில் தொடங்கிய இந்த தூறல் மழை இரவு வரையிலும் நீடித்தது. உதகையைப் பொருத்தமட்டில் கோடை சீசன் தொடங்குவதற்கு முன்னர் கோடைக்கு முந்தைய மழை தொடங்கும். பகல் நேரங்களில் சில மணி நேரம் மட்டுமே பெய்யும் இம் மழையிலிருந்துதான் கோடைக் காலமும் தொடங்குவதாக ஒரு கணிப்பு உள்ளது. ஆனால், நிகழாண்டில் முன்னதாகவே இந்த தூறல் மழை பெய்துள்ளதால் உதகையில் தற்போது நிலவி வரும் பின்பனிக் காலமும் முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 அதேபோல்,  உதகையில் விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளதால் தற்போது அரசு பூங்காக்கள் உள்ளிட்ட  அனைத்து இடங்களிலும் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பெய்துள்ள இத் தூறல்  மழை மேலும் சில நாள்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த மழை உதகை நகரை மேலும் பசுமையாக்கவும், மலர்ச்செடிகளுக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது. மேலும், தேயிலை மற்றும் மலைக் காய்கனிகளுக்கு தற்போது நீர்பாய்ச்சி வரும் சூழலில் இந்த தூறல் மழை பயிர்களுக்கும் ஏற்றதாகவே அமைந்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மாவட்டத்தில் 
உதகை நகரைத் தவிர குன்னூர் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளிலும் தற்போது குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இச்சூழலில்,  மேட்டுப்பாங்கான பகுதிகளில் உள்ள ஊற்றுகளில் இருந்து மீண்டும் தண்ணீர் சுரக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் தட்டுப்பாடும் மெல்ல தீரும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே  மாவட்டத்தின் பிரதான பிரச்னையாக இருந்துவரும் வனத் தீக்கும் இந்த தூறல் மழையால்  தீர்வு ஏற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. 
நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை வடக்கு வனக் கோட்டத்தின் சில பகுதிகளிலும்,  தெற்கு வனக் கோட்டத்தில் குன்னூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும், முதுமலை புலிகள் காப்பகத்தின் சில இடங்களிலும் தற்போது வனத் தீ ஏற்பட்டுள்ளது. பெரியஅளவில் இத் தீ ஏற்படாவிட்டாலும்  தீ மேலும் பரவி விடாமல் இருக்க எதிர்த் தீ ஏற்படுத்தப்பட்டு வனத் தீ கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போது பெய்துள்ள தூறல் மழையால் வனத் தீ உடனடியாக ஏற்படும்அபாயம் நீங்கியுள்ளது. அத்துடன் வனத்தீ ஏற்படும் வாய்ப்பும் குறைந்துள்ளது. இதனால்  வனத் துறையினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
மொத்தத்தில் உதகையில் தற்போது பெய்துவரும் தூறல் மழை மேலும் வலுவடைந்தால்  கோடை சீசனுக்கு உதகை மட்டுமன்றி நீலகிரி மாவட்டமே தயாராகி விடும் என எதிர்பார்க்கலாம்.
மஞ்சூரில்...: மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளாக எடக்காடு, குந்தா பாலம், பிக்கட்டி, கிண்ணக்கொரை, கீழ்குந்தா, எமரால்டு, தங்காடு, காத்தாடிமட்டம், எம்.மணியட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே உறைபனி அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் காணப்பட்டது. இதனால், தேயிலைத் தோட்டம், மலைத் தோட்ட விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும், ஒரு சில இடங்களில் அவ்வப்போது தீ விபத்து ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், குளிர் காற்று வீசத் தொடங்கியது. தொடர்ந்து மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஒரு சில இடங்களில் பரவலான மழை பெய்தது. இதனால், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் மலைத் தோட்ட காய்கனி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
குன்னூரில்...: குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
இப் பகுதியில் காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்தது.  அவ்வப்போது மூடுபனியும் உருவாகியதால், வாகனங்களை இயக்குவதில் சிரமம் எற்பட்டது.  இதன் காரணமாக இங்குள்ள சுற்றுலாத் தலங்களான சிம்ஸ்பார்க், லேம்ஸ்ராக், டால்பினோஸ், கேத்ரின் வாட்டர்பால்ஸ்,  கொடநாடு போன்ற பகுதிகளில் உள்ளகாட்சி முனைகளைப் பயணிகள் காணமுடியாத சூழல்  ஏற்பட்டது . பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.  இதன்காரணமாக சுற்றுலாத்  தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com