கோத்தகிரியில் ஆதிவாசி இளைஞர் மீது போலீஸார் தாக்குதல்:  விசாரணைக்கு எஸ்.பி. உத்தரவு

கோத்தகிரியில் ஆதிவாசி இளைஞர் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவிட்டுள்ளார்.

கோத்தகிரியில் ஆதிவாசி இளைஞர் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவிட்டுள்ளார்.
கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியைச் சேர்ந்தவர் ஜடையன்  மகன்  முருகன் (27). இவர் இருளர் இன பழங்குடி ஆவார்.  இவர் கடந்த 13ஆம் தேதி கோத்தகிரி பேருந்து நிலையத்தில் குடிபோதையில் இருந்ததாகவும்,  அங்கிருந்து கர்சன் செல்லும் பேருந்தில் ஏற முயன்றபோது ஒரு பெண்ணின் மீது இடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது,  அந்தப் பெண்ணிடம் நகையைத் திருடியதாக நினைத்து அங்கிருந்தவர்கள் முருகனைத் தாக்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற  காவல் துறையினர் முருகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அரை நிர்வாணமாக  நிற்க வைத்து கடுமையாகத் தாக்கினராம். பின்னர் வழக்கு ஏதும் பதியாமல் முருகனை வீட்டிற்கு அனுப்பிவிட்டனராம்.
இந்நிலையில்,  முருகனை அவரது குடும்பத்தினர் கோத்தகிரிஅரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று முருகனுக்கு சிகிச்சைஅளிக்க கூடாது என்றும், மேலும்,  தானாகவே  கீழே விழுந்து காயமேற்பட்டதாகக் கூறும்பயும் முருகனை போலீஸார் மிரட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக  அங்கு  முருகனுக்கு சிகிச்சைஅளிக்கப்படவில்லை.
இது குறித்து  மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிப்பதற்காக முருகன் புதன்கிழமை உதகைக்கு வந்தார். ஆனால்,  ஆட்சியரை நேரில் சந்திக்க முடியாத நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா இச்சம்பவம் குறித்து முருகனிடம் நேரடியாக விசாரித்த பின்னர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 
இப்பிரச்னை தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது குறித்தும், முருகன் மீதான தாக்குதல் குறித்தும் குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில்   தனிப்படை அமைத்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவிட்டார்.  காவல்  துறையினர் தவறு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கேரள மாநிலம் அட்டப்பாடியில் ஆதிவாசி இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நீலகிரியில் மற்றோர் ஆதிவாசி இளைஞர் காவல் துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் ஆதிவாசி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவிக்க பழங்குடியினர் நல அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com