வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்: நீலகிரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் வனப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உரிய திருத்தங்களை செய்து விவசாயிகளையும், மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வனப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உரிய திருத்தங்களை செய்து விவசாயிகளையும், மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மசினகுடி பகுதி மக்கள் சார்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:
கடந்த 1969-ஆம் ஆண்டில் விவசாயத் துறை உத்தரவின்படி முதுமலை வனவிலங்கு சரணாலயத்தைப் பாதுகாக்க, சரணாலயத்தைச் சுற்றிலும் 5 கி.மீ. சுற்றளவிற்கு தொழிற்சாலைகள் அமைவதைத்  தடுக்க உத்தரவிடப்பட்டது. 
அதைத் தொடர்ந்து கடந்த 1991-ஆம் ஆண்டில் வனப்பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதையடுத்து, சுமார் 46,000 ஏக்கர் ரயத்துவாரி பட்டா நிலங்களும்,  பிற நிலங்களுமாகச் சேர்த்து சுமார் 1.92  லட்சம் ஏக்கர் நிலங்கள் வன நிலங்களாக அறிவிக்கப்பட்டன.
இப்பிரச்னை இன்னமும் தொடர்வதால் கடந்த 1992-ஆம் ஆண்டிலிருந்து 2009-ஆம் ஆண்டு வரை நீலகிரி மாவட்டத்தில் 10 சிற்றூராட்சிகள், 4 பேரூராட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசமுள்ள நிலங்களை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு,  அவர்கள் அங்கிருந்து  எந்நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. 
இதனிடையே கடந்த 1992-ஆம் ஆண்டில் இப்பிரச்னை தமிழக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டதன் காரணமாக, உயர்நிலைக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு  அது தொடர்பாக கருத்துருவும் பெறப்பட்டது. ஆனால், அதனை இன்னமும் அரசு ஏற்றுக் கொள்ளாததால் இந்தக் குழுவால் மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை.
ஆகவே,  ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெறாமலேயே பத்திரப் பதிவை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
நீலகிரி மாவட்ட மக்களின் நம்பிக்கைக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வனத்துறை வழக்குரைஞரையும்,  முதுமலை புலிகள் காப்பகத்திற்கும்,  நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கும் கெளரவ வன உயிரினப் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இருவரையும்  பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள புலிகள் பாதுகாப்புத் திட்டம், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் புதிய திட்டமாக  உருவாக்கப்பட வேண்டும்.  உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி செல்லும் விவசாயிகள்,  மாணவ, மாணவியர்,  தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இச்சாலையில் இரவு நேரப் போக்குவரத்தை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 
இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால், இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு  வழியில்லை. இவ்வாறு இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் வர்கீஸ்,  மாவட்ட முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் மொய்தீன்,  விவசாயிகள் சங்கத் தலைவர் நரசிம்மன்,  வாகன ஓட்டுநர் சங்கத் தலைவர் சுகீஷ், ஆதிவாசிகள் சங்கத் தலைவர் மாதன் உள்ளிட்டோருடன் மகளிர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com