கடும் மேகமூட்டத்தால் தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு: விவசாயிகள் கவலை

கடும் மேக மூட்டம் காரணமாக தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

கடும் மேக மூட்டம் காரணமாக தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
மஞ்சூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பசுந்தேயிலைச் செடிகளில் மகசூல் அதிகரித்துள்ளது. எனினும் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.  பசுந்தேயிலை கிலோ ரூ. 10, ரூ. 11க்கு விற்பனை செய்யப்பட்டது. 
இதனால் வருமான இழப்பு ஏற்பட்டதால் அவர்கள் கவலை அடைந்தனர். மேலும், தங்களது தோட்டங்களைப் பராமரிக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். 
இந்நிலையில், தற்போது தேயிலைச் செடிகளில் கொப்புள நோய்த் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் தேயிலை மகசூல் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
 குறிப்பாக மஞ்சூர், உதகை, கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளில் கொப்புள நோய்த் தாக்குதால் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
   இதுகுறித்து தேயிலை விவசாயி சசிகுமார் கூறியதாவது: 
 தேயிலைச் செடிகளுக்கு வெயிலும், மழையும் மாறி,மாறிக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் மகசூல் அதிகரிக்கும். தொடர்ந்து வெயில் அடித்தால் தேயிலைச் செடிகள் கருகி விடும். தொடர் மழை பெய்தாலோ, மேகமூட்டம் காணப்பட்டாலோ கொப்புள நோய் உள்பட பல்வேறு நோய்கள்த் தாக்குதல் அதிகரிக்கும். தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் ஒருசில இடங்களில் வானம் எப்போதும் கடும் மேகமூட்டமாகக் காணப்படுகிறது. இதனால் பசுந்தேயிலையைக் கொப்புள நோய்த் தாக்கி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மகசூல் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 
மேலும், இனி வரக்கூடிய டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் கடும் பனிப் பொழிவு இருக்கும். அப்போது பசுந்தேயிலையில் கொழுந்து இலைகள் கருக ஆரம்பித்து விடும். இதனால் தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. 
இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் பசுந்தேயிலைக்கு விலை  அதிகரிக்குமா என்றும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com