தேயிலைச் செடிகளை கவாத்து செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தல்

மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது நிலவும் காலநிலையால்  பசுந்தேயிலைச் செடிகளை விவசாயிகள்

மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது நிலவும் காலநிலையால்  பசுந்தேயிலைச் செடிகளை விவசாயிகள் கவாத்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைத் தொழிலே பிரதானம். இத்தொழிலில் ஏராளமான சிறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தேயிலைச் செடியில் நல்ல மகசூல் கிடைக்க மழையும், வெயிலும், மாறி, மாறிக் கிடைக்க வேண்டும். மேலும், தேயிலைச் செடிகளில் கவாத்து என்பது மிகவும் முக்கியமானதாகும். 
இதுகுறித்து குந்தா தேயிலை வாரிய இணை இயக்குநர் ரமேஷ் கூறியதாவது: மாவட்டத்தில் வடகிழக்கு, தென்மேற்குப் பருவ மழை பெய்யும் காலங்களில் தேயிலைத் தோட்டங்களில் உள்ள மண்ணில் ஈரப்பதம் இருக்கும். அப்போது, தேயிலைச் செடிகளை கவாத்து செய்யலாம். ஆனால், தற்போது நிலையான சீதோஷ்ணம் நிலவாமல் பருவ மழை பொய்த்துப் போவது, தாமதமாக மழை பெய்வது போன்ற மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. 
இதனால் விவசாயிகள் தங்களது தேயிலைத் தோட்டங்களில் கவாத்து செய்ய குறிப்பிட்ட மாதத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மழை பெய்யும் காலங்களில் தேயிலைத் தோட்டங்களில் உள்ள மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது தேயிலைச் செடிகளை கவாத்து செய்வது நல்லது. இம்மாதத்தில் தொடர்ந்து அவ்வப்போது மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துள்ளதால் தற்போது தேயிலைச் செடிகளில் கவாத்து செய்வது நல்ல தருணமாக கருதப்படுகிறது. தற்போது மண்ணில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் கவாத்து செய்துகொள்ளலாம். 
மேலும், தற்போது தேயிலைச் செடிகளுக்கு கவாத்து செய்வதால் வரும் 45 நாள்களுக்குள் தேயிலைச் செடிகள் துளிர்விட்டு வளர்ந்துவிடும். இதன் காரணமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்படும் பனியால் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் தேயிலைச் செடிகள் பாதுகாக்கப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் நல்ல தரமான பசுந்தேயிலையை அறுவடை செய்யமுடியும். எனவே, விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஈரப்பதம் இருக்கும்போது கவாத்து செய்து பயனடையலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com