மஞ்சூரில் டாஸ்மாக் மதுக் கடை  திறக்கக் கோரி திடீர் கடையடைப்பு

மஞ்சூர் பஜார் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கோரி திடீரென கடையடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மஞ்சூர் பஜார் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கோரி திடீரென கடையடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மஞ்சூர்,  எடக்காடு, பெங்கால்மட்டம், பிக்கட்டி, கிண்ணக்கொரை, ஆராமைல், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டுகளுக்கு முன் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், பிக்கட்டி, கிண்ணக்கொரை, மஞ்சூர், தேவர்சோலை, பெங்கால்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க கோரி பொதுமக்கள், கடைக்காரர்கள் சார்பில் பல்வேறு கட்டப் போரட்டங்கள் நடத்தப்பட்டன. 
இதனையடுத்து பிக்கட்டி, கிண்ணக்கொரை, தேவர்சோலை, பிக்கட்டி பழக்காட்டு சந்திப்பு பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
 இந்நிலையில், மஞ்சூரில் டாஸ்மாக் மதுபானக் கடை இல்லாதததால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே,  மதுபானக் கடையைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தியும் மஞ்சூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடந்த சில நாள்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மஞ்சூர், கரியமலை கிராமம் அருகில் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கும் தனியார் பள்ளிக் கட்டடத்தில் டாஸ்மாக் மதுக் கடையைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. வெள்ளிக்கிழமை இரவு சுமார் 20 க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு இந்த கட்டத்திற்குள் வைக்கப்பட்டன. சனிக்கிழமை பகல் 11 மணி அளவில் மதுக் கடை  திறக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கரியமலை கிராம மக்கள் ஊர் தலைவர் போஜன் தலைமையில் காவல் நிலையத்துக்குச் சென்று அந்த இடத்தில் மதுக் கடையைத் திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர். எதிர்ப்புக் காரணமாக டாஸ்மாக் ஊழியர்கள் அந்த இடத்துக்குக் கொண்டு வந்த மது பாட்டில்களை திரும்ப எடுத்துச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த மஞ்சூர் பகுதி கடைக்காரர்கள் திடீரென கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைக்காரர்கள், மதுக் கடையைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதே பகுதியில் ஓரிரு நாள்களில் மது பானக் கடை திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கடையடைப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com