ஒவ்வாமை நோய்க்கு கறிக்கோழிகள் பலி

தாராபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வளர்க்கப்படும் கறிக்கோழிகள் கடந்த சில வாரங்களாக ஒவ்வாமை நோயால்
ஒவ்வாமை நோய்க்கு கறிக்கோழிகள் பலி

தாராபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வளர்க்கப்படும் கறிக்கோழிகள் கடந்த சில வாரங்களாக ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் இறக்கின்றன. இதனால் பண்ணையாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

குறைவாக மழை பெய்வதாலும், வறட்சி காரணமாகவும், கோழி வளர்ப்புக்கேற்ற தட்பவெப்ப நிலை நிலவுவதாலும் தாராபுரம் பகுதியில் உள்ளவர்கள் விவசாயத்தைக் கைவிட்டு கோழிப் பண்ணைகளைத் துவக்கினர்.
முதலில் சிறிய அளவில் துவக்கப்பட்ட கோழிப் பண்ணைகள் தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளன. தாராபுரம், சங்கரண்டாம்பாளையம், வெள்ளியம்பாளையம், உ.ஆலாம்பாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக 100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன.
இதில் தினமும் முழு வளர்ச்சி அடைந்த நிலையில் 3 லட்சம் கறிக்கோழிகள் விற்பனைக்குத் தயாராகி வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் கோழிப் பண்ணைகள் வந்திருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளாகத்தான் பண்ணைகளும், கறிக்கோழி உற்பத்தியும் அதிகரித்துள்ளன. பிறந்த 11-ஆவது நாளில் கோழிக்குஞ்சுகள் பண்ணைகளுக்கு கொண்டுவரப்பட்டு, தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்கப்படும்.
சராசரியாக 5-ஆவது வாரம் தொடங்கி 7-ஆவது வாரத்தில் கோழியின் எடை அரை கிலோ முதல் முக்கால் கிலோ வரை அதிகரிக்கும். 7-ஆவது வாரத்தில் குஞ்சுகள் முழு வளர்ச்சி (2.25 கிலோ) அடைந்து விற்பனைக்குத் தயாராகின்றன.
பொதுவாக தொடக்கத்திலிருந்து சுகாதார சூழலில் கோழிகள் பராமரிக்கப்பட்டால் நோய்த் தாக்குதல் அவ்வளவாக இருப்பதில்லை. சுகாதாரமற்ற சூழலில்தான் வெள்ளைக்கழிசல், ஐ.பி.டி. போன்ற நோய்கள் தாக்குகின்றன. கடந்த சில வாரங்களாக கறிக்கோழிகளை 6 அல்லது 7-ஆவது வாரத்தில் ஒவ்வாமை நோய் தாக்குகின்றது. தாக்குதலுக்கு உள்ளாகும் முதல் நாளிலேயே சராசரியாக 50 முதல் 100 கோழிகள் வரை உயிரிழக்கின்றன.  
இந்த நோய் தாக்கியதும் கோழிகளுக்கு சளிப் பிடித்து காய்ச்சல் ஏற்படும். இதனால் கோழிகள் ருசித்தன்மையை இழந்து குறைந்த அளவிலேயே தீவனத்தை உட்கொள்ளும். தொடர்ந்து நுரையீரலை நோய் தாக்கியதும் இறப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற இறப்பிலிருந்து தப்பிக்கும் கோழிகளின் எடை சராசரி எடையிலிருந்து 500 கிராம் குறைகிறது.
இதுகுறித்து கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:
ஒவ்வாமை நோய் தடுப்பு மருந்து மிகவும் விலை அதிகம். இது உற்பத்தி செலவை விட அதிகமாகிறது. அதையும் மீறி செலவு செய்தால் பேரிழப்பு ஏற்படுகிறது. கறிக்கோழிகளின் சந்தை நிலவரம் நிலையற்றதாக இருப்பதால் சிறிய பண்ணையாளர்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. ஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் கோழித் தீவனங்கள் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துகளை சலுகை விலையில் வழங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்ததாவது:
பண்ணைகளை சுத்தமாகப் பராமரித்தால் இந்த நோய் தாக்குதல் ஏற்படாது. பொதுவாக குளிர் காலங்களில் கறிக்கோழிகளை இந்த நோய் தாக்குவது இயல்பான ஒன்று. இந்த நோய் தாக்குதல் குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தால் தகுந்த ஆலோசனை வழங்கப்படும் என்றனர்.
அழிவின் விளிம்பில் இருந்து வரும் கறிக்கோழிகளை காப்பாற்றுவதன் மூலம் கோழிப் பண்ணையாளர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com