குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க சரியான திட்டமிடல் அவசியம்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

சரியான முறையில் திட்டமிட்டு மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


சரியான முறையில் திட்டமிட்டு மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தின் குடிநீர்த் திட்டப் பணிகள் மற்றும் வறட்சி குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு நிதித்துறைச் செயலர் (செலவினம்) பி.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழகத்தில் மழை அளவு குறைந்துள்ளதால் அனைத்துப் பகுதிகளிலும் வறட்சியான சூழல் நிலவி வருகிறது. இதைப் போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர், எவ்வித தங்குதடையுமின்றி கிடைத்திட துரிதமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சீரான முறையில் குடிநீர் வழங்குவது குறித்து அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து, சரியான முறையில் திட்டமிட்டு, குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நீர் உள்ள இடங்களைக் கண்டறிந்து தேவையான இடங்களில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கும், பழுதடைந்த ஆழ்துளைக் கிணறுகளைச் சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மற்றும் வறட்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, குண்டடம் ஊராட்சி ஒன்றியம், நந்தவனம்பாளையம் ஊராட்சி, எஸ்.அம்மாபாளையத்தில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாக கால்நடைகளின் தீவனத்துக்காக ஹைட்ரோ போனிக் முறையில் மக்காச்சோள தீவனங்கள் வளர்ப்பதற்கான உபகரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், ஏ.நடராஜன், கே.என்.விஜயகுமார், உ.தனியரசு, காளிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி, மாநகராட்சித் தனி அலுவலர் மா.அசோகன், மாவட்ட ஊரக வளாச்சி முகமைத் திட்ட இயக்குநர், சார் ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com