ஆற்றல் பாதுகாப்பு ஊக்குவிப்பு திட்டங்கள்: சிறு, குறு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

தமிழக அரசின் ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் பாதுகாப்புக்காக கொண்டு வந்துள்ள ஊக்குவிப்பு திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட

தமிழக அரசின் ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் பாதுகாப்புக்காக கொண்டு வந்துள்ள ஊக்குவிப்பு திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததாவது:
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் உபயோகப்படுத்தப்படும் மின் மற்றும் வெப்ப ஆற்றலினை சேமிக்கவும், குறைக்கவும் பெருமளவு வாய்ப்புகள் இருந்தும், போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நிறுவனங்கள் ஆற்றல் சேமிப்புக்கான முயற்சிகளை மேற்கொள்வதில்லை.
இத்தகைய சூழலில் உள்ள நிறுவனங்களுக்கு ஆற்றல் சேமிப்புத் திறன் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் பாதுகாப்புக்காக முயற்சிகளை ஊக்குவிக்க திட்டம் அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளது.
இதில், முதற்கட்டமாக நடப்பாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் உபயோகப்படுத்தப்படும் மின் மற்றும் வெப்ப ஆற்றலினை கணக்கிட்டு, ஆற்றல் தணிக்கை மேற்கொள்ள, அங்கீகரிக்கப்பட்ட ஆற்றல் தணிக்கையாளர்களுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகையில் 50 சதவீதம் மானியமாக வழங்க 50 நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தணிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட செலவினங்களை மேற்கொண்டு, ஆற்றலினை குறைந்தது 15 சதவீதம் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு செலவினத்தில் 25 சதவீத மானியம் வழங்கப்படும். அதன்படி, நிறுவனம் ஒன்றுக்கு சராசரியாக ரூ. 1.5 லட்சம் வீதம் 6 நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ரூ. 7.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மானியத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாவட்டத்திலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பரவலான விழிப்புணர்வினை ஏற்படுத்த, விழிப்புணர்வு முகாம், மாவட்ட தொழில் மைய கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் வரும் 16-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
முகாமில் தேசிய உற்பத்தி சிறு, குறு தொழில் வளர்ச்சி வங்கி, ஆற்றல் தணிக்கையாளர்கள் உள்பட நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் பிரதிநிதிகளிலிருந்து மொத்தம் 25 நபர்கள் அடுத்த கட்ட 3 நாள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
மாவட்டத்திலுள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, ஆற்றல் (எரி சக்தி) சேமிப்பினை மேற்கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள 8248356265 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com