திருப்பூரில் சொத்து வரியை உயர்த்தும் முடிவைக் கைவிட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர் மாநகரில் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவன கட்டடங்களுக்கு சொத்து வரியை உயர்த்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகரில் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவன கட்டடங்களுக்கு சொத்து வரியை உயர்த்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் வியாழக்கிழமை எழுதியுள்ள கடித விவரம்:
திருப்பூர் மாநகரில் பழைய நகராட்சிப் பகுதி மட்டுமில்லாது, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது இணைக்கப்பட்ட வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள் மற்றும் வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம், முத்தணம்பாளையம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், தொட்டி மண்ணரை, நெருப்பெரிச்சல் ஆகிய 8 ஊராட்சிகள் உள்பட அனைத்து மாநகரப் பகுதிகளிலும் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களின் கட்டடங்களுக்குச் சொத்து வரியைப் பல மடங்கு உயர்த்துவதற்கு, மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கூறப்பட்ட கட்டடங்களுக்கு சொத்து வரியை உயர்த்தி அறிவித்து, அதை ஒரு வார காலத்துக்குள் செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது நடைமுறையில் செலுத்தி வரும் சொத்து வரியில் இருந்து வீடுகளுக்குச் சராசரியாக 4 மடங்கு, தொழிற்சாலைகளுக்கு சராசரியாக 8 மடங்கு, வணிக நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 12 மடங்கு என்ற முறையில் வரியை உயர்த்தி இருப்பதாகத் தெரிகிறது.
உள்ளாட்சி அமைப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில், முறையாக மாநகராட்சியில் விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்றாமலும், வரியை உயர்த்துவது பற்றி சட்டப்படி உரிய அரசாணை வெளியிடாமலும், பொது மக்களுக்கு வெளிப்படையான அறிவிப்பு இல்லாமலும், இந்த வரி வசூல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதமானது, கண்டிக்கத்தக்கது. மாநகரின் பொதுவான கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல், சொத்து வரியை உயர்த்துவதில் மட்டும் அரசு நிர்வாகம் கவனம் செலுத்துவது மக்களை வஞ்சிக்கும் செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
எனவே, இந்த மோசமான நடவடிக்கையை கைவிட்டு, மக்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்றித் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com