திருப்பூரில் போலி குடிநீர் நிறுவனம் மீது நடவடிக்கை

திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி குடிநீர் நிறுவனத்தை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் புதன்கிழமை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர்.

திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி குடிநீர் நிறுவனத்தை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் புதன்கிழமை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பூர், இடுவம்பாளையம் பகுதியில் போலி குடிநீர் நிறுவனம் செயல்பட்டு வருவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கே.தமிழ்ச்செல்வன், உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் முருகேசன், தங்கவேல் உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள், இடுவம்பாளையம் பகுதியில் புதன்கிழமை மாலை ஆய்வு நடத்தினர்.
 அப்போது, இடுவம்பாளையம், மூகாம்பிகை நகரைச் சேர்ந்த கணேசன் (51) தனது வீட்டில், பிரபல குடிநீர் விற்பனை நிறுவனங்களின் பெயரில் போலி குடிநீர் நிறுவனம் நடத்தி வந்தது தெரிந்தது. அவரது வீட்டிலிருந்து 20க்கும் மேற்பட்ட குடிநீர் கேன்கள், குடிநீர் நிரப்பப் பயன்படும் கருவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பிரபல நிறுவனங்களின் லேபிள், குடிநீர் கேன்களை வாங்கி, சாதாரண நீரை கேன்களில் நிரப்பி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். உணவுப் பாதுகாப்பு சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொது மக்கள்,  தங்களுக்குத் தெரிந்த இதுபோன்ற புகார்களை உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தெரிவிக்கலாம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com