திருப்பூரில் கூடுதலாக கொடிநாள் நிதி வசூல்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூரில் கொடிநாள் நிதி வசூல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடவும் கடந்த ஆண்டு கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

திருப்பூரில் கொடிநாள் நிதி வசூல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடவும் கடந்த ஆண்டு கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
     முன்னாள் படைவீரர்கள் நலத் துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கெளரவிக்கும் விதமாக கொடிநாள் தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.
    இதில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசியதாவது:
   முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினரை கெளரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் தேதி படைவீரர் கொடிநாள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இதே நாளில் கொடிநாள் நிதி வசூல் செய்து, அதனை முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோரது நலனுக்கென மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்கள், நிதியுதவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக,   ஒவ்வோர் ஆண்டும் கொடிநாள் நிதி வசூலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
   திருப்பூர் மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த  2016ஆம் ஆண்டுக்கு ரூ. 65 லட்சத்து 19 ஆயிரத்து 700 என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், அனைவரின் ஆதரவால் இலக்கைவிடவும்  ஒரு கோடியே 21 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.  
  நடப்பு ஆண்டுக்கு ரூ. 71 லட்சத்து 71,700  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தாராளமாக நிதி வழங்கி,  கடந்த ஆண்டை விடவும் பல மடங்கு அதிகமாக நிதி வசூலில் சாதனை படைக்க ஆதரவு தர வேண்டும். நம்மை பாதுகாக்கும் பணியில் இருக்கும் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தினரைப் பாதுகாத்திடும் நிதிப் பங்களிப்பில் அனைவரும் உதவி வேண்டும் என்றார்.
  முன்னதாக, 12 முன்னாள் படைவீரர் குடும்பங்களுக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். முன்னாள் படைவீரர் நல அலுவலகக் கண்காணிப்பாளர் இளங்கோவன், முப்படை வீரர் வாரிய உப தலைவர் கர்ணல் எம்.ராமகிருஷ்ணன், முன்னாள் படைவீரர் நல அலுவலக நல அமைப்பாளர் ரவிசந்திரன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com