உணவு வணிக நிறுவனங்கள் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உணவு வணிகம் சார்ந்த நிறுவனங்கள், விற்பனையாளர்கள் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உணவு வணிகம் சார்ந்த நிறுவனங்கள், விற்பனையாளர்கள் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் உரிமம், பதிவு பெறாமல் இயங்கும் அனைத்து உணவு வணிகம் செய்யும் அரசு மற்றும் தனியார் தயாரிப்பு நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனை வர்த்தகம் செய்பவர்கள், விநியோகஸ்தர்கள், பள்ளி, கல்லூரி விடுதி உணவகங்கள், பேக்கரிகள், தள்ளுவண்டிக் கடைகளை, சாலையோரக் கடைகள், ஆடு, கோழி, மீன் இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகள், காய்கறி, பழக்கடைகள், இருப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், உணவு கொண்டு செல்பவர் அல்லது ஏற்றிச் செல்பவர், தினசரி, வார, உழவர் சந்தை வியாபாரிகள், மருந்தகங்கள், பால் விற்பனையாளர்கள், பிற உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள் தங்களுக்கான உரிமம் மற்றும் பதிவை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயமாகப் பெறவேண்டும்.
மாவட்டத்தில் இதுவரை 8,285 பேர் உரிமம், பதிவு பெற்றுள்ளனர். மீதமுள்ள 10 ஆயிரத்து 303 பேர் உரிமம் பெற வேண்டியுள்ளது. எனவே, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அறிவுறுத்தலின்படி, இனி வரும் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, அன்றைய தினமே உரிமம், பதிவு பெற்றுக் கொள்ளலாம்.
அதன்படி, டிசம்பர் 15-ஆம் தேதி திருப்பூர், பல்லடம் சாலை, அன்னபூர்ணா அரங்கு, 18-ஆம் தேதி தாராபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள உணவக மேல்தளம், 21-ஆம் தேதி திருப்பூர், புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள உணவக அரங்கம் ஆகியவற்றில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்குக் கீழ் உணவு வணிகம் செய்பவர்கள் ரூ. 100 கட்டணமும், அதற்கு மேல் வணிகம் செய்பவர்கள் ரூ. 2,000 கட்டணமும், தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ. 3,000 கட்டணமும் செலுத்தி, உரிய வங்கி செலுத்துச் சீட்டு கட்டணத்தை, முகாம் நடைபெறும் இடத்தில், அதற்கென தனியாக தொடங்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி சேவைப் பிரிவில் செலுத்தி, இணையம் மூலமாக விண்ணப்பித்து, அன்றைய தினமே உரிமம், பதிவு பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு 0421 2971190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உரிமம் பெறாத உணவு வணிகர்கள் மீது உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சட்ட விதிகளின் கீழ் 6 மாத சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் வரை அபராதமும் செலுத்த நேரிடும். துறை சார்ந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com