கால்நடை தீவனப் பிரச்னை சமாளிக்க அகத்தி வளர்ப்பு ஊக்குவிப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்

கால்நடை தீவனப் பற்றாக்குறையை சமாளிக்க அனைத்து பருவத்திலும் வளரும் அகத்தி மர வளர்ப்பு ஊக்குவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்தார்.
கால்நடை தீவனப் பிரச்னை சமாளிக்க அகத்தி வளர்ப்பு ஊக்குவிப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்

கால்நடை தீவனப் பற்றாக்குறையை சமாளிக்க அனைத்து பருவத்திலும் வளரும் அகத்தி மர வளர்ப்பு ஊக்குவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தெரிவித்தார்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ராக்கியாபட்டியில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அகத்தி மரக் கன்றுகளை, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் ச.ஜெயந்தி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
  மரக்கன்றுகளை வழங்கி அவர் பேசியது:
பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கால்நடைகள் விரும்பி உண்ணும் மர இலை தீவனங்களை வளர்க்கும் பொருட்டு, அகத்தி மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஊராட்சிகளில் உள்ள பொது இடங்கள், பள்ளிகள், கால்நடை மருந்தக வளாகங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இந்த மரக்கன்றுகளை நட்டு அதன் மூலம் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் உபயோகப்படுத்தும் விதமாக ஆணை பெறப்பட்டுள்ளது. அகத்தி மரம் ஆண்டின் எல்லா பருவத்திலும் வளரக்கூடியது. அகத்தி மரக்கன்று நடப்பட்ட 8 மாதங்களிலிருந்து அறுவடை செய்து பயன்படுத்தலாம். அதன் பின்பும் ஒவ்வொரு 60, 70 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு ஹெக்டேருக்கு 90 முதல் 100 டன் மகசூல் தரக்கூடியது.
திருப்பூர் மாவட்டத்துக்கு 54,480 அகத்தி மரக் கன்றுகள் பெறப்பட்டு, அதனை மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும் அனுப்பபட்டுள்ளது.
உடுமலை, அமராவதி வனச்சரகப் பகுதிகளில் உள்ள தளிஞ்சி, கோடந்தூர், கரட்டுப்பதி, ஈசல்தட்டு ஆகிய மலைவாழ் மக்களின் குடியிருப்புகளில் நடுவதற்கு வனத் துறை மூலமாக 1,000 அகத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது. மரக்கன்றுகளை பெற்று கால்நடைகளை நல்ல முறையில் வளர்த்து வருவாயை உயர்த்திக் கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 112 பயனாளிகளுக்கு அகத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, ஈட்டிவீரம்பாளையம், ராக்கியாபட்டி சமுதாய நலக் கூடம் அருகில் அகத்தி மரக் கன்றை மாவட்ட ஆட்சியர் நட்டு வைத்தார்.
இதைத் தொடர்ந்து. ஊராட்சி பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியினையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) அ.முருகன், கோட்ட உதவி இயக்குநர் அ.மகேந்திரன், கால்நடை மருத்துவர் கே.என்.ஆறுமுகம், அவிநாசி வட்டாட்சியர் அருணா, கால்நடை உதவி மருத்துவர்கள், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com