"உலகின் வழிகாட்டியாக இந்தியா திகழும்'
By DIN | Published on : 17th July 2017 08:20 AM | அ+அ அ- |
எதிர்காலத்தில் உலகின் வழிகாட்டியாக இந்தியா திகழும் என்று, பல்லடத்தில் நடைபெற்ற மாவட்ட அரிமா சங்க ஆளுநர் பதவியேற்பு விழாவில் சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜெகநாதன் பேசினார்.
அரிமா சங்கத்தின் 324 பி1 மாவட்ட ஆளுநர், நிர்வாகிகள் பதவியேற்பு விழா, பல்லடம் அருகே கே.என்.புரம் விக்னேஷ் மகால் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆளுநராக கே.காளிசாமி, உதவி ஆளுநர்களாக எஸ்.மேத்திலால் கட்டாரியா, ஆர்.கருணாபூபதி, அமைச்சரவை செயலர்களாக ஆர்.ராமசுப்பிரமணியம், எஸ்.பூபாலன், மருத்துவர் ஆர்.நித்தியானந்தம், எம்.மதியழகன், 5 மண்டல தலைவர்கள், 22 வட்டாரத் தலைவர்களுக்கு சர்வதேச அரிமா சங்க சிறப்பு ஆலோசகர் கே.ஜி.ராமகிருஷ்ணமூர்த்தி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச அரிமா சங்க இயக்குநர் கே.தனபாலன், ஜி.ராமசாமி, ஆர்.சம்பத், எம்.குருநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இவ்விழாவில் சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜெகநாதன் பேசியது:
பள்ளிகள் அதிகரித்தால் சிறைச்சாலைகள் குறைந்திருக்க வேண்டும். ஆனால் குறையவில்லை. இதற்குக் காரணம் கல்வித் துறையில் வளர்ச்சி பெற்ற போதிலும், படித்தவர்கள் சொந்தக் காலில் நிற்கக் கூடிய தன்னம்பிக்கை கற்பிக்கப்படவில்லை. மனப்பாடக் கல்வி தனி மனித வளர்ச்சிக்கு உதவாது.
சுயநலமின்றி வாழ்பவனும், உலக நன்மைக்காகப் பாடுபடுவனும்தான் நிறை மனிதன். பல தடைகளைத் தாண்டி தற்போது நமது நாடு பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. எதிர்காலத்தில் உலகினுக்கே வழிகாட்டியாக நமது நாடு திகழும் என்றார். அதைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.