140 அடி உயர மின் கோபுரத்திலிருந்து விழுந்த தொழிலாளி தலை துண்டித்து சாவு
By DIN | Published on : 17th July 2017 08:18 AM | அ+அ அ- |
வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை, 140 அடி உயர மின்சார டவரிலிருந்து விழுந்த தொழிலாளி தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
முத்தூர், ராசாத்தாவலசு அருகில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கான ஒப்பந்ததாரரிடம், மேட்டூர், காமனேரியைச் சேர்ந்த செல்வம் மகன் எஸ்.சிவகுமார் (25) வேலை செய்து வந்தார்.
இவர் சக தொழிலாளர்களுடன் 140 அடி உயர கோபுரத்தில் ஏறி மின்கம்பிகளை இணைத்துக் கொண்டிருந்தார். அப்போது குனிந்து பேன்ட் பாக்கெட்டிலிருந்த கட்டிங் பிளேயரை எடுக்க முயன்றபோது திடீரெனத் தவறி கீழே விழுந்து விட்டார்.
இதில் மின் கோபுரத்தின் இரும்புச் சட்டங்களில் அடிபட்டு தலை தனியாகத் துண்டாகி, பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவர் இவ்வளவு உயரத்தில் இடுப்பில் கயிறு கட்டாமல் இருந்ததுடன், எந்தப் பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் வேலை செய்ததே துயரத்துக்குக் காரணமாகி விட்டது.
தொழிலாளி மிகவும் அஜாக்கிரதையாக வேலை செய்ய அனுமதித்ததற்காக, ஒப்பந்ததாரர் ராஜா, மேட்டூர்- நொச்சிவலசைச் சேர்ந்த மேஸ்திரி சீனிவாசன் ஆகிய இருவர் மீதும் வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மனைக்கு அனுப்பப்பட்ட சிவகுமாரின் உடலைப் பெற மறுத்து, அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.