ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திருப்பூர் அருகே ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் அருகே ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
  திருப்பூர் மாவட்ட மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில்,  பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். அதன் விவரம்:
உள்விளையாட்டரங்கைத் திறக்கக் கோரிக்கை: நல்லூர் நுகர்வோர் நலமன்றம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,  திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கட்டிமுடிக்கப்பட்ட உள்விளையாட்டரங்ககை விரைவில் திறந்து,  மாணவர்கள்,  விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   மங்கலம் அருகே நீலி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில்,  எங்கள் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து,  வீட்டுமனை அமைத்துள்ளனர்.  இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு,  பள்ளி,  குடிநீர்த் தொட்டி ஆகிய வசதிகள் ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் வட்டம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி,  நாரணாபுரம் கிராமம் அறிவொளி நகர் பொதுமக்கள் அளித்த மனுவில்,  1993-இல்  
திருப்பூரில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில்,   வீடு,  உடைமைகள் அனைத்தையும் இழந்தோம். இந்நிலையில்,  அன்றைய முதல்வர் ஜெயலலிதா,  நாரணாபுரம் கிராமத்தில் 1,249 குடும்பங்களுக்கு இடம் வழங்கினார்கள்.  எங்களுக்கு 24 ஆண்டுகளாகியும் பட்டா வழங்கப்படவில்லை.  பட்டா இல்லாததால் கல்விக் கடன், வங்கிக் கடன், அரசு வழங்கும் தொகுப்பு வீடு என அரசு சலுகைகளைப்  பெற முடியாமல் தவித்து வருகிறோம்.  வரும் 22-ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு வருகை தரும் முதல்வரை சந்தித்து கோரிக்கை  மனு அளிக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால்,  வரும் 22-ஆம் தேதி கடையடைப்பு,  கருப்புக் கொடிபோராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  திருப்பூர், வெள்ளியங்காடு பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளியங்காடு வரை 4 கி.மீ. தூரத்துக்கு  சிற்றுந்தில் ரூ. 3 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும்.  ஆனால் ரூ. 6 வசூலிக்கப்படுகிறது.
 இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே, இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com