பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய தாராபுரம் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு

காரிப் பருவத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய தாராபுரம் வட்டார விவசாயிகளுக்கு  வேளாண்மைத் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காரிப் பருவத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய தாராபுரம் வட்டார விவசாயிகளுக்கு  வேளாண்மைத் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குதல், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்தல், விவசாயத்தில் நிலைபெறச் செய்தல், வேளாண்மைத் தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல், விவசாயப் பெருமக்களை உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதுடன், உணவுப் பாதுகாப்புக்காக விவசாயிகளுக்கு கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்தி, வேளாண்மை வளர்ச்சியை மேம்படுத்தவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு மற்றும் மத்திய, மாநில அரசின் மானிய அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யலாம்.
கிராமம் மற்றும் குறுவட்ட அளவில் அறிவிக்கப்பட்ட பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் இத்திட்டத்தில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளப்படுவர். பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் இணையலாம்.
இத்திட்டத்தில், விதைப்பை தவிர்த்தல், விதைப்பு தோல்வியுறுதல், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புக்கு காப்பீடு வழங்கப்படும்.
தாராபுரம் வட்டாரத்தைப் பொறுத்தவரை காரிப் பருவத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் மக்காச்சோளம் பயிரிட அறிவிக்கப்பட்டுள்ளது.
சோளப்பயிர் பயிரிட அலங்கியம் மற்றும் பொன்னாபுரம் குறுவட்டப் பகுதியிலும், பாசிப் பயறு பயிரிட பொன்னாபுரம் குறுவட்டத்தில் 8 வருவாய் கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கடலைப் பயிருக்கு அலங்கியம், மணக்கடவு, காங்கேயம்பாளையம், கொங்கூர், தளவாய்ப்பட்டணம், ஊத்துப்பாளையம், மாம்பாடி, நாதம்பாளையம் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காரிப் பருவத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்த அடுத்த மாதம் 15-ஆம் தேதி கடைசியாகும் . மக்காச்சோளப் பயிருக்கு காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 22 ஆயிரத்து 50 மற்றும் பிரீமிய தொகையாக ரூ. 441, சோளப்பயிருக்கு காப்பீட்டு தொகையாக ரூ. 9 ஆயிரத்து 300,  பிரீமிய தொகையாக ரூ. 186, பாசிப் பயிருக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ. 13 ஆயிரம், பிரீமிய தொகையாக ரூ. 260, நிலக்கடலைப் பயிருக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ. 23 ஆயிரத்து 150,பிரீமிய தொகையாக ரூ. 463 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த விவரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர்கள் தேசிங்குராஜன் 9003587754, எல்.ரவிகுமார் 9363242535, கே.பாலுசாமி 9994778487, பி.கருப்பையா 8883728191, கிருபானந்தன் 8124268775 ஆகியோரை நேரிலோ, செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com