பெருமாநல்லூரில் மதுக்கடைக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 280 பேர் கைது

புதிதாக அமைத்த மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், புதிதாக மதுக்கடை திறக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும்

புதிதாக அமைத்த மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், புதிதாக மதுக்கடை திறக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் பெருமாநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 280 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைதுசெய்தனர்.
திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லூர், கணக்கம்பாளையம்,  பொங்குபாளையம், காளிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் புதிதாக  திறக்கப்பட்டுள்ள  மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், ஈட்டிவீரம்பாளையம், சொக்கனூர், வள்ளிபுரம், மேற்குப் பதி, பட்டாம்பாளையம், தொரவலூர் ஆகிய ஊராட்சிகளில் புதியதாக மதுக்கடைகளை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்  பெருமாநல்லூரில் அனைத்துக் கட்சியினர், 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 280  பேர் மீது பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ரங்கா நகர் மக்கள் போராட்டம்:
அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம், பழங்கரை ஊராட்சி எல்லைப் பகுதியான ரங்கா நகர் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை புதிய மதுக்கடை திறக்க முடிவு செய்யப்பட்டு கடை அமைக்கப்பட்டுள்ளது.இதையறிந்த அப்பகுதி மக்கள் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வருவாய்த் துறையினர்,  காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அந்த இடத்தில் மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com