குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை திங்கள்கிழமை அளித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை திங்கள்கிழமை அளித்தனர்.
 திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் விவரம்:
குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்: தாராபுரம் ஒன்றியம், தளவாய்ப்பட்டணம் அருகே உள்ள ஊத்துப்பாளையம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
 எங்களது கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக குடிநீர்ப் பிரச்னை நிலவுகிறது. அதிகாரிகளிடம் மனு அளித்த பின்னர் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், எங்களது கிராத்தைச் சேர்ந்த இரு பெண்கள், அதற்கு நீதிமன்றம் மூலமாக தடையாணை பெற்றுள்ளனர். இதனால், ஆழ்துளைக் கிணறு அமைத்தும், தண்ணீர் கிடைக்கவில்லை. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதபோல, திருப்பூர் மாநகராட்சி, 36-ஆவது வார்டு பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், வெள்ளி விழா நகர், தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒருமுறை 45 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. எனவே,  கூடுதல் நேரம், குடிநீர் விநியோகிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் மீது புகார்... சமூக ஆர்வலர் ஏ.அண்ணாதுரை அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது:
  பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வரும் விபத்தில் காயமடைந்தவர்கள், அறுவை சிகிச்சை செய்ய வரும் நோயாளிகளை, காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக அறுவை சிகிச்சை செய்கிறோம் எனக் கூறி, சிலர் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். இத்தகைய செயல்களுக்கு, அரசு மருத்துவமனைப் பணியாளர்கள், தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தரகர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
 இவ்வாறு, அழைத்துச் செல்லப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம், கூடுதல் பணம் கட்டினால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் எனக் கூறி, பணம் பறிக்கின்றனர். இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் குழுக் கூட்டம் நடத்த வேண்டும்: நல்லூர் நுகர்வோர் நல மன்றம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நுகர்வோர் குழுக் கூட்டம் நடத்த அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக நுகர்வோர் குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே, நுகர்வோர் குழுக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளத்தில் மண் எடுக்கும் அளவை அதிகரிக்க வேண்டும்: இது குறித்து பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்ட, மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஆண்டிபாளையம் குளம் சுமார் 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தில் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட 1,800 கன மீட்டர் அளவுக்கு, சில தினங்களிலேயே குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டுமே மண் எடுத்துச் சென்றுள்ளனர். எனவே, விவசாயிகள் பயனடையும் வகையில் இந்தக் குளத்தில் 10 ஆயிரம் கன மீட்டர் வரை மண்
எடுக்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தார் கலவை ஆலையை அனுமதிக்கக் கூடாது: பெருமாநல்லூர் அருகே உள்ள மொய்யாண்டம்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் தனியார் தார் கலவை தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த ஆலை அமைந்தால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையை அகற்ற வேண்டும்: திருப்பூர், கொங்கு பிரதான சாலை, இ.ஆர்.பி. நகர் பொதுமக்கள் அளித்த மனுவில், இப்பகுதியில் உள்ள தனியார் பாலித்தின் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதியில் உள்ள இந்தத் தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுக் கடைக்கு எதிர்ப்பு: மாநகராட்சி, 52-ஆவது வார்டு பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள பூங்கா நகர், வஞ்சி நகர், திருக்குமரன் நகர்  சபரி நகர் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக் கடையை அகற்ற வேண்டும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதேபோல், மாநகராட்சி 43-ஆவது வார்டு பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி மனு அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com