அமராவதி அணையைத் தூர்வார வேண்டும்: வலுக்கும் விவசாயிகளின் கோரிக்கை

கடந்த 59 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத நிலையில் இருந்து வரும் அமராவதி அணையை உடனடியாக தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 59 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத நிலையில் இருந்து வரும் அமராவதி அணையை உடனடியாக தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமராவதி அணை. 90 அடி உயரமுள்ள இந்த அணை 1958-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. திருப்பூர், ஈரோடு, கரூர் வரையில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அமராவதி அணையின் மூலம் பாசன வசதிகள் பெற்று வருகின்றன. குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகின்றது.

இந்நிலையில், இந்த அணை கடந்த 59 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அணைகள் தூர்வாரப்பட வேண்டும் என்பது நடைமுறையாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் அணை நிரம்பும்போது முழுக் கொள்ளளவு 4 டிஎம்சி என பொதுப் பணித் துறையினரால் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அணை நிரம்பும்போது நீர் இருப்பு 3 டிஎம்சி என்பதுதான் உண்மை. இதற்கு காரணம் அணை தூர் வாரப்படாததுதான்.

கடந்த ஆண்டுகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் பலமுறை அணை நிரம்பி வழியும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது நீரைத் தேக்கி வைக்க முடியாமல் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பலமுறை தண்ணீரை வெளியேற்றபட்டது.

முறையாக அணை தூர்வாரப்பட்டிருந்தால் 1 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக இருப்பு வைத்துக் கொள்ள முடியும். இதனால் கோடைக் காலத்தில் நீர் பற்றாக்குறையை சமா ளிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். நீண்ட காலமாகவே சுமார் 10 அடி ஆழத்துக்கு சில்ட் எனப்படும் சேரும், சகதியும் அணையின் உள்பகுதியில் இருந்து வருகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் சரிந்து விட்ட நிலையில், வெறும் மணல் மேடா க காட்சி அளித்து வருகிறது.

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு, கடந்த ஆண்டு ஆய்வு நடத்தி அணையை தூர்வார பரிந்துரை செய்திருந்தது. ஆனாலும், இந்த விஷயத்தில் தமிழக அரசு இன்னமும் முடிவு எடுக்காமல் இருப்பது அமராவதி விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
அமராவதி அணை தூர்வாரப்பட வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். தற்போது அணை தூர்வாரப்பட்டால் வரும் காலத்தில் மேலும் 1 டிஎம்சி தண்ணீரை இருப்பு வைத்துக் கொள்ள முடியும். மூன்று மாவட்ட விவசாயிகளுக்கு நீரை பகிர்ந்து கொடுக்கவும் முடியும். அணையை தூர்வார அதிக செலவாகும் என அரசு கருதினால் விவசாயிகளே தங்களது சொந்த செலவில் தூர்வாரிக் கொள்வோம். இதற்கு அரசு அனுமதி கொடுத்தால் போதும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com