இலவசக் கல்வித் திட்டத்தை வெளி மாநில பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: கல்வி விழிப்புணர்வுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

குழந்தைகளுக்கான இலவச கல்வித் திட்டத்தை வெளி மாநில, மாவட்ட பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசிய குழந்தைத்

குழந்தைகளுக்கான இலவச கல்வித் திட்டத்தை வெளி மாநில, மாவட்ட பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டம் மூலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டத்தின் சார்பில் கல்வி விழிப்புணர்வு கூட்டம் திருப்பூர், ஆத்துப்பாளையத்தில் நடைபெற்றது.  விழாவில், கல்வித் திட்ட சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர் பயிற்றுனர் செந்தாமரை வரவேற்றார். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் கே.நம்பிராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்துக்கு தொழில் காரணமாக பல்வேறு மாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் அவர்களுடைய குழந்தைகளை முறையாக பள்ளிகளில் சேர்ப்பது இல்லை. சிறிது காலத்துக்குப் பிறகு குழந்தைகளையும் வேலைக்கு அனுப்புகின்றனர். இதைத் தடுத்து நிறுத்தி, வேலைக்குச் செல்லும் குழந்தைகளை சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து இலவசக் கல்வி அளிக்கும் பணியை செய்து வருகிறோம். பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேலைக்கு செல்லும் குழந்தைகளைப் பற்றி 0422 2305445 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், அந்த குழந்தைகளை மீட்டு வந்து கல்வி அளிப்பதோடு, குழந்தைகளை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீது தொழிலாளர் துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.
இந்நிகழ்வில் தொழிற்கல்வி பயிற்றுநர்கள், தன்னார்வலர் பயிற்றுநர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்ட இயக்குநர் (திருப்பூர் பொறுப்பு) டி.வி.விஜயகுமார் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், ஊத்துக்குளி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 17 சிறப்புப் பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. அவற்றில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்களில் 311 பேர் ஒடிஸா, பிகார், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகள்
அதிக அளவில் படித்து வருகின்றனர். பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கென பிரத்யேக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 1,800 வீதம் அவர்களது கணக்கில் சேர்க்கப்படுகிறது. தற்போது, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மீட்கப்படும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து இலவசக் கல்வி பெற வைக்க முழு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதனைப் பிள்ளைகளின் பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com