வட மாநில பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதல்

உடுமலை அருகே வட மாநில பெண் தொழிலாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அவர்கள் பணியாற்றும் தனியார் நிறுவனத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடுமலை அருகே வட மாநில பெண் தொழிலாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அவர்கள் பணியாற்றும் தனியார் நிறுவனத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலையை அடுத்துள்ள மைவாடி பிரிவு அருகில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்தில், பிகார், ஒடிஸா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் வெளியூர் தொழிலாளர்கள் மட்டும் நிறுவனத்தின் அருகிலுள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்ப ட்டுள்ளனர்.
இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த 6 வட மாநில பெண் தொழிலாளர்கள் விடுதியில் இருந்து வெளியேறி உடைமைகளோடு உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை தப்பி ஓடியுள்ளனர். இதனால் கோபமடைந்த நிறுவனத்தின் விடுதிக் காவலர்கள் அந்தப் பெண்களைப் பிடித்து தாக்கியுள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த மடத்துக்குளம் போலீஸார் அங்கிருந்த 6 பெண் தொழிலாளர்களையும் மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அப்பெண்கள், ஒடிஸா, பிகார் மாநிலங்களைச் சேர்ந்த சோனா (19), ஹர்ஷா (19), மெரீனா (21), ஆஷா (20), கீதாஞ்சலி (19), லாவண்யா (22) எனத் தெரியவந்தது. பின்னர் அப்பெண்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களை திருப்பூரில் உள்ள காப்பகத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் கூறுகையில், "வடமாநில பெண் தொழிலாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பின்னலாடை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றோம். அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com