ஓ.இ.மில்களில் கழிவுப் பஞ்சுக்குப் பதிலாக முதல் தரப் பஞ்சை பயன்படுத்த முடிவு

தமிழகத்தில் ஓ.இ.மில்களில் கழிவுப் பஞ்சுக்கு பதிலாக முதல் தரப் பஞ்சை பயன்படுத்த தமிழ்நாடு ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஓ.இ.மில்களில் கழிவுப் பஞ்சுக்கு பதிலாக முதல் தரப் பஞ்சை பயன்படுத்த தமிழ்நாடு ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கோவை, வெள்ளக்கோவில், பல்லடம், சோமனூர், உடுமலை,  அன்னூர், அவிநாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்பாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பஞ்சை மூலப்பொருளாக கொண்டு 2-ஆம் நம்பர் கவுண்ட் முதல் 30-ஆம் நம்பர் கவுண்ட் நூல் உற்பத்தி செய்யும் ஓ.இ.மில்கள் 400  இயங்கி வருகின்றன. தினசரி ரூ. 20 கோடி மதிப்புள்ள 20 லட்சம் கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாக 75ஆயிரம் பேரும்,  மறைமுகமாக 2 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்த மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூல்கள் பல்லடம், சோமனூர் பகுதியில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் காடா துணி உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இத்துணிகளில் ஜீன்ஸ் பேண்ட்,  பெட்ஷீட் உள்ளிட்ட பல்வேறு ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.  கடந்த 2 ஆண்டுகளாக ஓ.இ.மில்களின் முக்கிய மூலப்பொருளான கோம்பர் கழிவுப் பஞ்சு விலை கட்டுபடியாகாத விலையில் விற்பதால் ஓ.இ.மில்களில் கோம்பர் கழிவுப் பஞ்சுக்குப் பதிலாக முதல் தர பஞ்சை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். 
 கோம்பர் கழிவுப் பஞ்சு செப்டம்பர் மாதம் கிலோ ரூ. 72-க்கும், முதல் தரப் பஞ்சு கிலோ ரூ. 123-க்கும் விற்பனையானது.  நவம்பரில் கோம்பர் பஞ்சு கிலோ ரூ. 82-க்கும்,  முதல் தரப் பஞ்சு கிலோ ரூ. 105-க்கும் விற்பனையானது. முதல் தரப் பஞ்சு விலை கடந்த மாதத்தை விட கிலோவுக்கு ரூ. 18 விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே சமயம் கோம்பர் கழிவுப் பஞ்சு கிலோ ரூ.10 விலை அதிகரித்துள்ளது. இதனால் ஓ.இ.மில் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோம்பர் கழிவுப் பஞ்சை அதிக விலை கொடுத்து வட மாநில ஜின்னிங் நிறுவனங்கள் வாங்கி அதனை முதல் தரப் பஞ்சில் கலப்பதற்கு பயன்படுத்துவதாலும்,  ரூபாய் நோட்டுகள் அச்சிட மத்திய அரசு நிறுவனம் 3 மாதத்துக்கு ஒரு முறை  கோம்பர் கழிவுப் பஞ்சை கொள்முதல் செய்வதாலும் கோம்பர் பஞ்சின் விலை உயர்ந்துள்ளது. ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி போன்ற வெளிநாடுகளுக்கு கோம்பர் கழிவுப் பஞ்சு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இதனால் உள்நாட்டின் தேவைக்கு கோம்பர் கழிவுப் பஞ்சு பற்றாக்குறை ஏற்பட்டு ஓ.இ.மில்களில் உற்பத்தி குறைப்பு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்க செயலாளர் அருள்மொழி கூறியதாவது:  
கோம்பர் கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்கு கிலோவுக்கு ரூ.15 வரி விதிக்க மத்திய அரசை கடந்த 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால் உள்நாட்டில் கோம்பர் கழிவு பஞ்சுத் தேவை பூர்த்தியாகும். அதே போல் ஜின்னிங் 
நிறுவனங்களில் கழிவுப் பஞ்சை கலப்படம் செய்வதைக் கண்டறிந்து தடுத்து நிறுத்திட வேண்டும். இதே நிலை நீடித்தால் நாட்டில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓ.இ. மில்களும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகும். 
இதுகுறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மித் இரானி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் கோம்பர் கழிவுப் பஞ்சு பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வரை கோம்பர் கழிவுப் பஞ்சு விலைக்கு இணையாக முதல் தரப் பஞ்சின் விலை  இருப்பதால் ஓ.இ.மில்களில் முதல் தரமான பஞ்சையே பயன்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com