பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு கீழ்பவானி திட்ட வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு கீழ்பவானி திட்ட வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன்  வாய்க்காலுக்கு மொத்தம் 3,200 கனஅடி நீர் வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமானது பவானிசாகர் அணை. இதன் மொத்தக் கொள்ளளவு  120 அடியாகும். வியாழக்கிழமை நிலவரப்படி  அணையின் நீர்மட்டம்  82 அடியாகவும் நீர் இருப்பு 16.9 டிஎம்சியாகவும் உள்ளது.  
பவானிசாகர் அணையில்  போதிய நீர் இருப்பு உள்ளதால் அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு கீழ்பவானி திட்ட வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன்  வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைப் பகுதியில் நடைபெற்ற இதற்கான விழாவில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டு அணையின் கால்வாய் மதகு பொத்தானை அழுத்தி கீழ்பவானி திட்ட கால்வாய்க்குத் தண்ணீரை திறந்துவிட்டனர். அப்போது, கால்வாய் மதகில் சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரில் அமைச்சர்கள், அதிகாரிகள், விவசாயிகள்  மலர்களைத் தூவி வரவேற்றனர். இந்தத் தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 1,43,747 ஏக்கர் விளைநிலங்கள் முதல்போக பாசன வசதி பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் 500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு படிப்படியாக 1,500 கனஅடியாக உயர்ந்தது. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனத்துக்கு ஆற்று மதகு மூலம் 1,700 கனஅடிநீர் திறந்துவிடப்பட்டது. காய்ந்துபோன தென்னை, வாழை உள்ளிட்டவை இந்தத் தண்ணீர் திறப்பால் காப்பாற்றப்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.  
கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துவிட்டாதல் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. தற்போது அணையின் நீர்மட்டம் 82 அடியைத் தாண்டியுள்ளதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த முறை மட்டுமே கீழ்பவானி திட்ட வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன்  வாய்க்கால் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 தண்ணீர் திறப்பு, நிறுத்தம்
விவரம்: அக்டோபர் 5 முதல் 24-ஆம் தேதி வரை 20 நாள்கள் தொடர்ச்சியாகத் தண்ணீர் திறந்துவிடப்படும். அதைத் தொடர்ந்து, 10 நாள்களுக்குத் தண்ணீர் நிறுத்தம், 15 நாள்களுக்கு தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில் நான்கு முறை நடை முறைப்படுத்தப்படும்.
மொத்தம் 120 நாள்களில் 80 நாள்கள் தண்ணீர் திறப்பு என்றும், 40 நாள்கள் தண்ணீர் நிறுத்தம் என்றும்  பாசனத்துக்குத் தண்ணீர்  திறப்பு  இருக்கும். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com