மழை, வெள்ளக் காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: பொது மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

மழை, வெள்ளக் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மழை, வெள்ளக் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் வருவாய்த் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:
ஆண்டுதோறும் அக்டோபர் 13-ஆம் தேதி சர்வதேச பேரிடர் குறைப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் மக்கள் தங்களைப் பாதுகாத்து கொள்ள எச்சரிக்கை மிக அவசியம் என்பதை உறுதிபடுத்தவே இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொதுமக்கள் மழை, வெள்ளக் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  ஆறு,  குளங்களை கடக்கும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.  தண்ணீர் சூழ்ந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்து வைக்க வேண்டும். இடி, மின்னல் காலங்களில் மின்சாதன பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சிய குடிநீரையே பயன்படுத்த வேண்டும், என்றார். திருப்பூர் ரயில் நிலையம் அருகே துவங்கிய பேரணி,  முக்கிய வீதிகள் வழியாக சென்று சிக்கண்ணா கல்லூரியில் நிறைவடைந்தது. இதில், மழை, வெள்ள காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது தொடர்பான விழிப்புணர்வு குறித்த பதாகைகளை  கல்லூரி மாணவ, மாணவியர் பேரணியில்  ஏந்திச் சென்றனர்.
ஆட்சியரக வளாகத்தில்: பேரிடர் காலத்தில் மழை, வெள்ளத்தின்போது தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை வழங்குதல்,  தீ மற்றும் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுப்பது,  உயரமான கட்டடங்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக மீட்பது, கால்நடைகளை மழை வெள்ளக் காலங்களில் மீட்பது போன்ற செயல் விளக்க நிகழ்ச்சி  மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி,  வட்டாட்சியர்கள் ரமேஷ்,  சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com