குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு: தொற்று நோய் பரவல்: மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு

குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீர்கேட்டால் தொற்று நோய்கள் ஏற்படுவதாகக் கூறி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீர்கேட்டால் தொற்று நோய்கள் ஏற்படுவதாகக் கூறி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், பொது மக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.
திருப்பூர் மாநகராட்சி, 52-ஆவது வார்டு, பலவஞ்சிபாளையம் பகுதி மக்கள் அளித்த மனு: பலவஞ்சிபாளையம் விநாயகர் கோயில் அருகே 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வடிகால் இல்லாத காரணத்தால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதிகளில் தேங்கி நிற்கிறது. ஏற்கெனவே இருந்த கழிவுநீர்க் கால்வாய் மூடிவிட்டது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, இப்பகுதியில் வசிப்போருக்கு காய்ச்சல், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, முதலாவது மண்டலம், பாஜக முன்னாள் கவுன்சிலர் ஆர்.நடராஜன் அளித்துள்ள மனு:
மாநகராட்சிப் பகுதியில் வரைபட அனுமதி பெறாமல் வீடு கட்டினால் அதற்கான வரி விதிக்கப்படும்போது, அபராதமும் விதிக்கப்படுகிறது. அந்த அபராதத் தொகையை ஒவ்வொரு முறை வீட்டுவரி கட்டும்போதும் செலுத்த வேண்டும் என அறிவித்து, கடந்த 6 மாதங்களாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூரில் பெரும்பாலும் அங்கீகாரம் இல்லாத இடங்களே உள்ளன. மாநகராட்சிப் பகுதியில 1,200 சதுரடிக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே வரைபட அனுமதி கிடைக்கும். புதிய வீடுகட்ட, சிறிய வீடுகளுக்கு அனுமதி பெறக் கூடுதல் செலவாகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி நிர்வாகம் வருவாய் ஈட்டும் ஆர்வத்தை மக்கள் நலனில் காட்டுவதில்லை. எனவே, இந்த விவகாரத்தில் ஒருமுறை மட்டுமே அபராதத் தொகை செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அலகுமலை ஊர்ப் பொது மக்கள் அளித்த மனு விவரம்:
அலகுமலை அடிவாரத்தில் இருந்து முக்குட்டி விநாயகர் கோயில் வரை தார்சாலை அமைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள பாதை மழையால் மண் அரிப்புக்குள்ளாகி பொது மக்கள் செல்ல முடியாத நிலை நிலவிவருகிறது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் குழிகளில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தார்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி வேறு திட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், அனுப்பட்டியைச் சேர்ந்த ஆ.அண்ணாதுரை அளித்துள்ள மனு:
பல்லடம் நகராட்சிக்கு குப்பை கொட்டுவதற்காக கேத்தனூரில் 8 ஏக்கர் பரப்பளவில் நிலம் வாங்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அந்த நிலத்தில் குப்பைகள் கொட்டுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் வாகனங்கள் அங்கு செல்ல வழித்தடம் இல்லாததே ஆகும். வழித்தடம் இல்லாத நிலத்தை வாங்கி வருமான இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். மாறாக நகராட்சிக் குப்பைகள் நீர்நிலைகளில் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், நீண்ட தொலைவில் உள்ள பகுதிகளுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எனவே, மக்களின் பணம் விரயம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பொது மக்கள் தரப்பில் இருந்து 236 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
முன்னதாக, வருவாய்த் துறையின் மூலமாக 12 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகள், மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு உதவித் தொகைக்கான ஆணைகளை ஆகியவற்றையும் ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி, தனித் துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com