அவிநாசி அருகே கிராமத்துக்குள் வராத அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

அவிநாசி அருகே, நாதம்பாளையம் கிராமத்துக்குள் வராத அரசுப் பேருந்தை பொது மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவிநாசி அருகே, நாதம்பாளையம் கிராமத்துக்குள் வராத அரசுப் பேருந்தை பொது மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி அருகே, நாதம்பாளையம் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் போக்குவரத்துப் பயன்பாட்டுக்காக இவ்வழித்தடத்தில் ஒரே ஒரு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்தப் பேருந்து கடந்த ஒரு மாதகாலமாக, திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக நாதம்பாளையம் வரும்போது காலை, மதியம், மாலை நேரங்களில் ஊருக்குள் வராமல், மாற்றுப்பாதையில் சென்றுவிடுகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், பொது மக்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து, வட்டார மோட்டார் ஆய்வாளர், போக்குவரத்துத் துறையினர் உள்ளிட்டோரிடம் பல முறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பேருந்து வழக்கம்போல வியாழக்கிழமை காலையும் நாதம்பாளையத்துக்குள் வராமல், மாற்றுப் பாதையில் சென்று விட்டு, மீண்டும் காலை 8.10-க்கு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் அந்தப் பேருந்தை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக திருப்பூர், அவிநாசி, நாதம்பாளையம் வழியாக தெக்கலூர் வரை இப்பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், இதே பேருந்தை கூடுதலாகப் புதிய வழித்தடத்தில் இயக்க அண்மையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், எங்கள் பகுதிக்கு சரியான நேரத்துக்கு வந்து செல்வதில்லை. தினமும் 3 முறை வருவதும் இல்லை. மேலும், திருப்பூரில் இருந்து நாதம்பாளையம் வருவதற்கு அவிநாசி வரை ஒரு பயணச் சீட்டும், அவிநாசியில் இருந்து நாதம்பாளையம் வருவதற்கு ஒரு பயணச் சீட்டும் என இரு பயணச்சீட்டுகள் பெற வேண்டியுள்ளது.
இதேபோல, நாதம்பாளையத்தில் இருந்து திருப்பூர் செல்லும்போதும் இரு பயணச் சீட்டுகள் பெறவேண்டியுள்ளது. இதனால் பொது மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்னைகளைச் சீரமைத்து, நாதம்பாளையத்துக்கு வழக்கம்போல பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார், போக்குவரத்துத் துறையினர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஓரிரு நாள்களில் முறையாகப் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பொது மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com