ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்: திருப்பூரில் 2 ஆயிரம் பேர் கைது

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2 ஆயிரம் பேரை

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2 ஆயிரம் பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ (அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு) அமைப்பை சேர்ந்தவர்கள், கடந்த வாரம் 7-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை இரவு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து வெள்ளிக்கிழமை காலை விடுவித்தனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் அவர்களது போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் தொடங்கி கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் என மாவட்டத்தில் மட்டும் கூட்டமைப்பைச் சேர்ந்த 7 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஆட்சியரகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை
போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையில் லேசான தள்ளமுள்ளு ஏற்பட்டது. இதில் 1330 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றம் உத்தரவு: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தாற்காலிகமாக திரும்பப்பெறுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் திருப்பூரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாலை 4.30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இவர்களில் பலர் தங்கள் அலுவலகம் சென்று கையொப்பமிட்டு விட்டு திரும்பினர். மேலும் பெரும்பாலோனர் வீட்டுக்கு திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com