குறுவை சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் குறுவை சாகுபடிக்காக அமராவதி அ ணையில் இருந்து புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் குறுவை சாகுபடிக்காக அமராவதி அ ணையில் இருந்து புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலமாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை நீர் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக போதுமான பருவ மழை பெய்யாததால் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, மக்காச்சோளம் மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர்கள் காய்ந்துவிட்டன.
குறிப்பாக  கரையோர கிராமங்களில் குடிநீர்த் திட்டங்கள் அனைத்தும் முடங்கின. ஆனாலும், இந்த ஆண்டில் அணையில் இருந்த நீர் இருப்பை பொருத்து குடிநீருக்காகவும், நிலைப் பயிர்களைக் காப்பாற்ற உயிர்த் தண்ணீருக்காகவும் ஒரு சில முறை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
ஆனாலும் குடிநீருக்காக பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் மழையை எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அதன்படி, அணையின் நீர்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 81 அடியாக உயர்ந்தது.  இந்நிலையில், பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் புதன்கிழமை திறந்துவிடப்பட் டது.
இதுகுறித்து, பொதுப் பணித் துறையினர் கூறியதாவது:
பழைய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள குமரலிங்கம், சர்கார் கண்ணாடிப்புத்தூ ர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய எட்டு வாய்க்கால்களில் 250 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக 7,520 ஏக்கர்கள் பயன்பெற உள்ளது. குறுவை சாகுபடிக்காக 120 நாள்களுக்கு 75 நாள்கள் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு, 45 நாள்கள் அடைப்பு என முறை வைத்துத் திறக்கப்படும்.
இதன் மூலமாக அணையில் இருந்து 1,944 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும். மேலும், ராமகுளம், கல்லாபுரம் வாய்க்கால்களில் தலா 25 கன அடி வீதம் 50 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றனர்.
அணை நிலவரம்:
90 அடி உயரம் கொண்ட அணையில் புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீர்மட்டம் 81.86 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,033 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து 309 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com